பாஜகவுக்கு ‘குட்பை’ சொல்லும் எடப்பாடி பழனிச்சாமி?
|
சட்டசபை தேர்தலுக்கு பின் தமிழகத்தில் என்டிஏ ஆட்சி அமையும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி உள்பட பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் தான் தேர்தலுக்கு பிறகு அதிமுக, பாஜகவை கழற்றிவிடுகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு இன்று எடப்பாடி பழனிச்சாமி சொன்ன வார்த்தை தான் முக்கிய காரணமாகும். இது பாஜகவினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் அதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம். |
|
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அடுத்த மாதம் முதல் வாரம் அல்லது 2வது வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. தேர்தலை அமைதியாக நடத்தி முடிக்க தேவையான பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. தமிழகத்தில் இந்த முறை நான்கு முனை போட்டி நிலவுகிறது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, சீமானின் நாம் தமிழர், விஜயின் தவெக இடையே போட்டி உள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக, அன்புமணி ராமதாசின் பாமக, ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் உள்ளன. தற்போது தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறது. நாளை மறுநாள் தமிழக பாஜக பொறுப்பாளர் பியூஷ் கோயல் தமிழகம் வருகிறார். அப்போது பாஜக - அதிமுக கூட்டணி இறுதி செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இ்தற்கிடையே தான் தற்போது எடப்பாடி பழனிச்சாமி கூறிய கருத்து என்டிஏ எனும் தேசிய ஜனநாயக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சட்டசபை தேர்தலையொட்டி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். "மக்களைக் காப்போம்.. தமிழகத்தை மீட்போம்" என்ற பெயரில் அவர் தற்போது சென்னையில் பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில் தான் மதுரவாயல் பிரசாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி, '' அதிமுக எப்போதும் கூட்டணியுடன் மக்களை நம்பி தேர்தலை சந்திக்கும் கட்சி. இந்த தேர்தலில் திமுகவுக்கு பூஜ்ஜியம் தான் கிடைக்கும். அதிமுக கூட்டணிக்கு ராஜ்ஜியம் கிடைக்கும். திமுகவின் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதே மக்களின் கனவாக உள்ளது. இந்த சட்டசபைத் தேர்தலில் அதிக இடங்களில் வென்று அதிமுக ஆட்சி அமைக்கும். அதனை ஸ்டாலின் பார்க்கத்தான் போகிறார். ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு திமுக அடிமையாக உள்ளது. திமுக கூட்டணியில் தான் கட்சிகள் 10 ஆண்டுகளாக அடிமையாக உள்ளன. எங்கள் கூட்டணி அப்படியில்லை. இது வெறும் தேர்தலுக்கான கூட்டணி மட்டும்தான். தேர்தலுக்கு பின் அந்தந்த கட்சிகள் கூட்டணியில் தொடர விருப்பம் இல்லையென்றால், தங்களின் கொள்கைக்கேற்ப செயல்படலாம்'' என்றார். இதுதான் பாஜகவை கதிகலங்க வைத்துள்ளது. ஏனென்றால் தமிழகத்தில் என்டிஏ ஆட்சி என்று பாஜகவின் அமித்ஷா, பிரதமர் மோடி பேசி வருகின்றனர். பொதுக்கூட்ட மேடைகளிலும் அதே கருத்தை தான் முன்வைத்து வருகின்றனர். அதிமுக - பாஜக வென்று ஆட்சியை பிடித்தால் எடப்பாடி பழனிச்சாமி தான் என்று அவர்கள் கூறவில்லை. தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மட்டுமே எடப்பாடி பழனிச்சாமி தான் என்டிஏ முதல்வர் என்று கூறி வருகிறார். இதனால் அதிமுகவை வைத்து பாஜக கூட்டணி ஆட்சிக்கு திட்டமிட்டு வருவதாக பலரும் கூறி வருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அதிமுக தலைவர்கள் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி கிடையாது. அதிமுக தனித்து ஆட்சியமைக்கும் என்று கூறி வருகின்றனர். இந்த விஷயத்தில் என்டிஏ கூட்டணியில் குழப்பம் தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே தான் ''தற்போது அமைக்கப்பட்டுள்ளது தேர்தலுக்கான கூட்டணி மட்டும்தான். தேர்தலுக்கு பின் அந்தந்த கட்சிகள் கூட்டணியில் தொடர விருப்பம் இல்லையென்றால், தங்களின் கொள்கைக்கேற்ப செயல்படலாம்'' என்று கூறியுள்ளார். இதனால் சட்டசபை தேர்தலில் அதிமுக தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்தால் பாஜக உள்பட அனைத்து கூட்டணி கட்சிகளையும் எடப்பாடி பழனிச்சாமி கழற்றி விடுகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. |