23 பாகிஸ்தானியர்கள் இந்திய கடற்படையினரால் மீட்பு
மோமாலிய கடற்கொள்ளையர்களிடம் சிக்கித் தவித்த 23 பாகிஸ்தானியர்களை இந்திய கடற்படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
அரபிக்கடல் பகுதியில் ஈரான் நாட்டுக் கொடியுடன் சென்ற மீன்பிடிக் கப்பல் ஒன்றை கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர்.
கடத்தப்பட்ட கப்பலில் இருந்து இந்திய கடற்படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்திய கடற்படையினர் இரண்டு கப்பல்களில் கடத்தப்ட்டவர்களை மீட்கும் முயற்சியில் களம் இறங்கியுள்ளனர்.
சோமாலிய கடற்கொள்ளையர்களுக்கு இந்திய கடற்படையினர் பதிலடி கொடுத்தனர். சுமார் 12 மணி நேரத்திற்கு பிறகு, கடற்கொள்ளையர்கள் இந்திய கடற்படையினரிடம் சரண் அடைந்துள்ளனர்.
இதையடுத்து கடத்தப்பட்ட கப்பலில் இருந்த 23 பாகிஸ்தானியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். சோமாலிய கடற்கொள்ளையர்களின் கப்பலுக்குள் நுழைந்த இந்தியக் கடற்படையினர் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை, 'கடந்த மார்ச் 28 ஆம் திகதி மாலை ஈரான் நாட்டை சேர்ந்த மீன்பிடிக் கப்பலான 'அல்-கம்பார் 786'ஐ சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர். எமக்கு தகவல் கிடைத்தவுடன், அதிரடி நடவடிக்கை எடுத்து குறித்த கப்பலில் இருந்த 23 பேரையும் பத்திரமாக மீட்டுள்ளோம்' என இந்திய கடற்படை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.