போர்டோவை அச்சுறுத்தும் காட்டுத்தீ .
ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் கடுமையான காட்டுத்தீ பரவி வரும் நிலையில், அங்கு மீண்டும் புதிய வெப்ப அலைகள் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதனால் பல பிராந்தியங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் (104 டிகிரி ஃபாரன்ஹீட்) ஐத் தாண்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
பிரான்சின் தென்மேற்கு நகரமான போர்டோவிலிருந்து வெறும் 15 கிலோ மீட்டர் தொலைவில் காட்டுத்தீ எரிந்து வருவதால், அப்பகுதி மக்கள் வெளியேற்றப்படலாம் என எச்சரிக்கப்பட்டு தயார்நிலை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
பிரான்சின் ஜிரோன்ட் மற்றும் லாண்டஸ் ஆகிய பகுதிகள் மஞ்சள் எச்சரிக்கையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, இது "இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நாடு எதிர்கொள்ளும் மிகவும் கடுமையான காட்டுத்தீ" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மாட்ரிட்டின் மேற்கே 27,000 ஹெக்டேயருக்கும் அதிகமான நிலப்பரப்பு தீயில் கருகியுள்ள நிலையில், ஸ்பெயின் தொடர்ந்து 5 ஆவது நாளாக தேசிய அவசரநிலையைச் சந்தித்து வருகின்றது. இதுவரை பிரான்சில் சுமார் 2,20,000 மக்களும், ஸ்பெயினில் 1,00,000-க்கும் அதிகமான மக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஜனவரி மாதம் முதல் பிரான்சில் மட்டும் 1,16,085 ஹெக்டேயர் நிலப்பரப்பு எரிந்து சாம்பலாகியுள்ளது. இதில் 90% தீச்சம்பவங்கள் சிகரெட் துண்டுகள், பார்பிக்யூ மற்றும் கவனக்குறைவான வேலைகள் போன்ற மனிதர்களின் அலட்சியத்தாலேயே ஏற்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
மேலும், தீ வைப்புச் சம்பவங்கள் தொடர்பாக கடந்த 6 ஆம் திகதி முதல் 162 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.புவி வெப்பமயமாதல் காரணமாக ஐரோப்பா உலக சராசரியை விட இரண்டு மடங்கு வேகமாக வெப்பமடைந்து வருவதால், இதுபோன்ற பேரழிவு தரும் காட்டுத்தீ சம்பவங்கள் அதிகரித்து வருவதாக காலநிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.