
சீன ஜனாதிபதியை 4 வாரங்களில் சந்திப்பேன்.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்ற பின்னர் கனடா, சீனா, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதித்தார்.
இதையடுத்து அமெரிக்க சோயாபீன்களை கொள்வனவு செய்யும் நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள சீனா அமெரிக்காவில் சோயாபீன்சை கொள்முதல் செய்வதை நிறுத்தியது.
இந்நிலையில் சீனா, சோயாபீன்ஸ் இறக்குமதியை நிறுத்தியதால் அமெரிக்க சோயாபீன்ஸ் விவசாயிகள் பெரும் நட்டத்தை சந்தித்தனர். இந்நிலையில் ட்ரம்ப் இந்த மாத இறுதியில் தென்கொரியாவில் நடைபெற உள்ள ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டின் போது சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்திக்கவுள்ளார்.
இது தொடர்பாக ட்ரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:- நம் நாட்டில் சோயாபீன்ஸ் வாங்காததால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பேச்சுவார்த்தைக்காக மட்டுமே சீனா சோயாபீன்ஸ் வாங்குவதில்லை. நாம் வரிகள் மூலம் நிறைய சம்பாதித்து விட்டோம். அதில் கொஞ்சம் எடுத்து விவசாயிகளுக்கு உதவுவோம்.
நான் ஒரு போதும் நமது விவசாயிகளுக்கு பாதிப்பு உருவாக சம்மதிக்க மாட்டேன். சீனாவுடன் பில்லியன் கணக்கான டொலர் மதிப்பிலான பண்ணைப்பொருட்கள் ஒப்பந்தத்தை ஜோ பைடன் மேற்கொள்ளவில்லை. நான் நமது தேசபக்தர்களையும், விவசாயிகளையும் நேசிக்கிறேன். சீன ஜனாதிபதி ஜி ஜின் பிங்கை அடுத்த 4 வாரங்களில் நான் சந்திக்கவுள்ளேன். இந்த சந்திப்பில் சோயாபீன்ஸ் தான் முக்கிய விவாதப் பொருளாக இருக்கும்”இவ்வாறு அவர் கூறியுள்ளார்.