உக்ரைனுக்கு பிரித்தானியாவின் உதவிக்கரம்!

02.03.2025 10:00:00

ஜெலென்ஸ்கி-ஸ்டார்மர் சந்திப்பின் விளைவாக உக்ரைனுக்கு புதிய கடன் உதவி வழங்குவதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. உக்ரைனின் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், பிரித்தானிய அரசு 2.6 பில்லியன் பவுண்டுகளை கடனாக வழங்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் பிரித்தானியாவின் பிரதமர் மற்றும் தொழிலாளர் கட்சி தலைவரான கெய்ர் ஸ்டார்மர் ஆகியோரின் சந்திப்புக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியானது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடனான வார்த்தை மோதலுக்கு பிறகு, பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் நடந்த இந்த சந்திப்பு அதிக கவனத்தை ஈர்த்தது.

பிரித்தானியா வழங்க முன்வந்துள்ள இந்த கடனுதவி போர்ச் சூழலில் சிக்கியுள்ள உக்ரைனுக்கு அவர்களின் தற்காப்பு திறனை மேம்படுத்த உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திப்பின் போது, போரின் ஆரம்பம் முதல் பிரித்தானியா அளித்து வரும் தொடர்ச்சியான ஆதரவுக்கு ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்தார்.

புதிதாக வழங்கப்பட்ட கடன் குறித்து ஜெலென்ஸ்கி கூறுகையில், "இது கொள்கை அடிப்படையிலான ஆதரவின் வெளிப்பாடு" என்றார். இந்த நிதியானது உக்ரைனின் பாதுகாப்பு திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் வழங்கப்பட்டுள்ளது.

முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்களின் வருவாயைப் பயன்படுத்தி இந்த கடன் திருப்பிச் செலுத்தப்படும் என்றும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டார்.

"இந்த நிதி உக்ரைனில் ஆயுத உற்பத்திக்காக பயன்படுத்தப்படும்,” “போரைத் தொடங்கியவரே அதற்கான விலையையும் கொடுக்க வேண்டும் - இதுவே உண்மையான நீதி" என்று அவர் மேலும் தெரிவித்தார்.