கைப்பாவையாகும் ரணில்!

19.08.2022 10:09:49

ரணில் விக்ரமசிங்கவை அதிபர் பதவிக்கு தெரிவு செய்தது தமது கட்சி என்பதால், அவர் தமது கட்சிக்கு தேவையான வகையில் செயற்பட வேண்டும் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

மேலும் நாங்கள் தெரிவு செய்த அதிபர் எமக்கு தேவையான வகையில் நடந்துகொள்ள வேண்டும். அதில் இருக்கும் தவறு என்ன? எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

 

சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பான அரசியல் விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“ஐக்கிய மக்கள் சக்தியினர் டலஸ் அழகப்பெருமை அதிபராக தெரிவு செய்ய முயற்சித்தனர். ஆனால் அது முடியாமல் போயுள்ளது.

நாளை தேர்தல் நடந்தாலும் எமக்கே வெற்றி

எனவே பொதுஜன பெரமுனவுக்கே இன்னும் மக்கள் ஆணை இருக்கின்றது என்ற பலத்தை நாங்கள் நாடாளுமன்றத்தில் காண்பித்துள்ளோம். நாளைய தினம் தேர்தலுக்கு சென்றாலும் அந்த பலத்தை நாங்கள் காட்டுவோம்.

மக்கள் அதனை செய்து காட்டுவார்கள். மகிந்த ராஜபக்ச பதவி விலகிய பின்னர், கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் பதவியை ஏற்குமாறு சிலருக்கு அழைப்பு விடுத்தார்.

சஜித் பிரேமதாசவுக்கு அழைப்பு விடுத்த போது, அதிபர் பதவி விலகும் தினத்தை அறிவிக்குமாறு கூறினார். சரத் பொன்சேகாவை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தும் போது நான் அதிபர் மாளிகைக்குள் இருந்தேன்.

எந்த பேரம் பேசலும் இல்லாமல் பதவியை ஏற்ற ரணில்

சரத் பொன்சேகா, சமூக வலைத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் தொடர்பில் அச்சத்தில் இருந்தார். சமூக ஊடகங்களில் என்ன கூறுகிறார்கள் என்பதை அறிய தனக்கு 10 நாட்கள் அவகாசம் வழங்குமாறு சரத் பொன்சேகா கோரியிருந்தார்.

அதன் பின்னர் அனுரகுமார திஸாநாயக்கவிடம் கேட்ட போது, நீங்கள் விலகி, அரசாங்கத்தை ஒப்படைத்தால் ஏற்றுக்கொள்கிறேன் என கோட்டாபயவிடம் கூறினார். நாட்டை பொறுப்பேற்க எவரும் இல்லாத நேரத்தில் ரணில் விக்ரமசிங்க அதனை ஏற்றுக்கொண்டார்.

நான் ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் கொள்கைகளை ஏற்றுக்கொண்டவன் அல்ல. அவர் நான் நேசிக்கும் பாத்திரமும் அல்ல. ஆனால் நாடு கஷ்டத்தில் விழுந்திருந்த சந்தர்ப்பத்தில், தோளில் சுமந்தவர் என்ற வகையில் அவருக்கு நான் மரியாதை செலுத்துகிறேன்.

ஏனையவர்கள் ஒதுங்கி செல்லும் போது, ஏழு முறை நாட்டின் பிரதமராக பதவி வகித்த அனுபவமிக்க தலைவரான ரணில் விக்ரமசிங்க எந்த நிபந்தனையும் இன்றி ஏற்றுக்கொண்டார்.

அனைத்து கட்சிகளுக்கும் ரணில் விடுத்துள்ள அழைப்பு

கொவிட் தொற்று நோய் பரவிய நேரத்தில் அலரி மாளிகையில் சர்வக்கட்சி கூட்டம் கூட்டப்பட்ட போது, ஏனைய கட்சிகளுக்கும் அதில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்த போது, அங்குமிங்கும் கலந்துரையாட முடியாது நாடாளுமன்றத்தை கூட்டுங்கள் என்று அந்த கட்சிகள் கூறின.

ஆனால், ரணில் விக்ரமசிங்க அந்த இடத்திற்கு வந்தார். அமர்ந்து பேசி முடிவை எடுப்போம், தொற்று நோய்க்கு மத்தியில் அரசியல் செய்ய முடியாது, அது முடிவுக்கு வந்த பின்னர் அரசியல் செயற்பாடுகளுக்கு திரும்பலாம் என்ற நிலைப்பாட்டில் இருந்தவர் ரணில் விக்ரமசிங்க.

பிரதமர் பதவியை ஏற்குமாறு கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்த போது எந்த நிபந்தனையும் இன்றி ரணில் விக்ரமசிங்க மாத்திரமே ஏற்றுக்கொண்டார்.

அது தொடர்பில் ரணில் விக்ரமசிங்க மீது மரியாதை இருக்கின்றது. அத்துடன் எந்த நிபந்தனையும் இன்றி தற்போது நாட்டை பொறுப்பேற்றுள்ளார். அனைவரும் ஒன்றாக அமர்ந்து பணியாற்றுவோம் என அனைத்து கட்சிகளுக்கும் தற்போது அழைப்பு விடுத்துள்ளார்” எனவும் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

பிரச்சினையை எதிர்கொள்ள முடியாத கோட்டாபய பதவி விலகியதே சிறிந்தது

அதேவேளை கோட்டாபய ராஜபக்ச பதவி விலகி சென்றமை தொடர்பில் எழுப்பபட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள சனத் நிஷாந்த,   

“நாட்டில் உருவாகியுள்ள பிரச்சினையை எதிர்கொள்ள முடியாது என்றால் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகி செல்வதே சிறந்தது.

இது கட்சியின் நிலைப்பாடு அல்ல எனது தனிப்பட்ட நிலைப்பாடு. துப்பாக்கியால் சுட முடியாத நபரிடம் பல்குழல் துப்பாக்கி இருந்தும் பயனில்லை. நன்றாக துப்பாக்கி பிரயோகம் செய்யக் கூடிய நபரிடம் ஒற்றை குழல் துப்பாக்கி இருந்தாலும் அவர் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்வார்.

நாட்டில் இதனை விட மிகப் பெரிய கிளர்ச்சிகள் ஏற்பட்டன. கோட்டாபய கிளர்ச்சியை எதிர்கொண்டிருக்க வேண்டும். கோட்டாபய ராஜபக்சர்கள் போல் அதனை எதிர்கொள்ளவில்லை.

இதனை விட மோசமான யுத்தம் நடைபெற்ற போது மகிந்த ராஜபக்ச அதனை எதிர்கொண்டார். இதனால், கோட்டாபய பதவி விலகி சென்றமை சிறந்தது என்பதே எனது நிலைப்பாடு” எனவும் தெரிவித்துள்ளார்.