'என் தாய் மண் மேல் ஆணை இது தமிழ் மானத்தின் சேனை'
'உலகநாயகன்' கமல்ஹாசன் நடிப்பில் தயாராகி இருக்கும் 'இந்தியன் 2' படத்தில் இடம்பெற்ற 'பாரா..' எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இந்த திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'இந்தியன் 2' திரைப்படத்தின் 'உலக நாயகன்' கமல்ஹாசன், சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், எஸ். ஜே. சூர்யா, பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், பிரம்மானந்தம், சமுத்திரக்கனி, காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வழங்குகிறது.
எதிர்வரும் ஜூலை மாதம் 12 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. பாடலாசிரியர் பா விஜய் எழுதியிருக்கும் இந்தப் பாடலை இசையமைப்பாளரும், பின்னணி பாடகருமான அனிருத் மற்றும் பின்னணி பாடகி ஸ்ருதிஹாசன் சமுத்திரலா ஆகியோர் இணைந்து பாடி இருக்கிறார்கள். இந்த பாடலில் இடம் பிடித்திருக்கும் 'என் தாய் மண் மேல் ஆணை இது தமிழ் மானத்தின் சேனை' எனும் வரிகள் உணர்வுபூர்வமாக அமைந்திருப்பதால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.
இதனிடையே இப்படத்தின் இசை வெளியீட்டு விழா எதிர்வரும் ஜூன் மாதம் முதல் திகதியன்று சென்னையில் உள்ள பிரம்மாண்டமான மைதானத்தில் நடைபெறுகிறது என்பதும், இந்நிகழ்வில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மெகா ஸ்டார் சிரஞ்சீவி, ராம்சரண் உள்ளிட்ட பலர் சிறப்பு அதிதிகளாக பங்குபற்றவிருப்பதாகவும் உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் வெளியாகி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.