மோதல்களுக்கு மத்தியிலும் அமெரிக்காவுடன் இராஜதந்திர பேச்சுவார்த்தை .

20.07.2026 14:14:41

ஈரான் மீது அமெரிக்கா தொடர்ச்சியான இராணுவத் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர கருத்துப் பரிமாற்றங்கள் மத்தியஸ்தர்கள் ஊடாகத் தடையின்றித் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஈரான் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

 

ஈரானியத் தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வௌியிட்ட ஈரானிய வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் எஸ்மாயில் பாகேய் (Esmaeil Baghaei) இந்த விபரங்களை வௌியிட்டார்.

இதேவேளை, அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு மத்தியிலும், கடந்த சில நாட்களாக எங்களது இராஜதந்திர கட்டமைப்பு மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றது எனவும் அதன் ஒரு கட்டமாக, குறிப்பிட்ட சில சர்வதேச மத்தியஸ்தர்கள் மூலமாக எங்களுக்குப் பல முக்கிய செய்திகளும் கருத்துக்களும் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளன எனவும் எனினும், பாதுகாப்பு காரணங்களுக்காக அந்தச் செய்திகளின் விபரங்களை தற்போது பகிரங்கப்படுத்த முடியாது. எனவும் எஸ்மாயில் பாகேய் தெரிவித்துள்ளார்.

போர் அல்லது இராஜதந்திரம் ஆகிய இரண்டில் ஒன்றை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கருத்தை ஈரான் நிராகரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஈரானின் இந்த அறிவிப்பானது, மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய பதற்றமான சூழ்நிலையில் இராஜதந்திர ரீதியிலான தீர்வுக்கான ஒரு சிறிய கதவை திறந்து வைத்துள்ளதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.