சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழ முடிவு செய்த பிரித்தானியா !

25.08.2021 10:07:06

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து, காபூலில் முகாமிட்டுள்ள வெளிநாட்டுப் படைகள் ஆகத்து 31 அன்று வெளியேற கெடு விதித்துள்ளனர் தாலிபான்கள்.

ஆனால், தாலிபான்கள் ஆட்சியின் கீழ் வாழ விரும்பாத ஆப்கன் நாட்டவர்கள் ஏராளமானோர் அங்கிருந்து வெளியேற விரும்புகிறார்கள். அவர்களை மீட்பதற்கோ போதுமான நேரம் இல்லை.

இதில் ஒரு வெட்கத்துக்குரிய விடயம் என்னவென்றால், எத்தனை நாடுகளின் படைகள் காபூலில் முகாமிட்டிருந்தாலும், அவை அமெரிக்க படையையே சார்ந்திருந்துள்ளன என்ற உண்மை வெளியாகியுள்ளதுதான். ஏனென்றால், அமெரிக்க படைகள் வெளியேறத்துவங்கியதும்தான் தாலிபான்கள் வேகமாக நாட்டை ஆக்கிரமிக்கத் தொடங்கினார்கள். பிரித்தானியா உட்பட மற்ற நாட்டவர்களை அவர்கள் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.

அதை நிரூபிப்பதுபோல், பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறுவதை இன்னும் கொஞ்ச காலம், அதாவது ஆகத்து 31க்குப் பிறகும் தள்ளிவைக்குமாறு கேட்டுக்கொள்ள, ஜோ பைடனோ அந்த கோரிக்கையை நிராகரித்து, அமெரிக்க வீரர்கள் ஆகத்து 31 அன்றே ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுவார்கள் என திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.