ஆப்கனில் சம்பளம் இல்லாமல் வறுமையில் வாடும் ஆசிரியர்கள் போராட்டம்
கடந்த 4 மாதங்களாக தங்களுக்கு சம்பளம் வராததால் வறுமையில் வாடுவதாக கூறி, ஆப்கானிஸ்தான் ஹெராட் மாகாணத்தில் இன்று (அக்.,23) நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் தெரிவித்ததாவது: தலிபான்கள் உடனடியாக சம்பளம் வழங்க வேண்டும். மோசமான நிதிநிலையில் எங்கள் குடும்பத்தினர்கள் உணவு, மருத்துவம் போன்ற மிக அத்தியாவசியமான மற்றும் அன்றாட தேவைளைக் கூட சமாளிக்க முடியவில்லை.
எங்கள் குடும்பங்களை வறுமை விரட்டுகிறது. ஒரு மாதமாக மருத்துவமனைக்கு கூட போக முடியாமல் தவிக்கிறோம். அன்றாடத் தேவைகளுக்காக வீட்டு உபயோகப் பொருட்களை எல்லாம் விற்றுவிட்டோம். இனி விற்பதற்குக் கூட ஒன்றுமில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் ஹெராட் மாகாண கல்வித் துறை தலைவர் சுஹாபுதீன் சாஹிப் கூறுகையில், ‛‛வரவிருக்கும் நாட்களில் ஒரு மாத சம்பளம் முதலில் வழங்கப்படும்,'' என்றார்.
கடந்த வாரம், இதேபோல் நூரிஸ்தா, சமங்கன் பகுதிகளில் மருத்துவர்கள் போராட்டத்தின் போது சம்பளம் கேட்டதோடு, மருத்துவமனைகளில் அடிப்படை மருந்துகளுக்குக் கூட கடும் பற்றாக்குறை நிலவுவதாகத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.