மதம் மாற கட்டாயப்படுத்தினார்

09.10.2022 10:00:01

அரணவ் என்னை மதம் மாற கட்டாயப்படுத்தினார் என நடிகை திவ்யா கண்ணீர் மல்க கூறினார். சின்னத்திரை நடிகையான திவ்யா, தனது காதல் கணவரான சின்னத்திரை நடிகர் அரணவ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சொல்லி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

தற்போது 3 மாத கர்ப்பிணியான தன்னை, அரணவ் மற்றொரு நடிகையுடன் தொடர்பு வைத்துக்கொண்டு அடித்து காயப்படுத்தி விட்டதாக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

பதிலுக்கு அரணவ், மனைவி திவ்யா மீது தனது தரப்பு நியாயங்களை கூறி புகார்களை அளித்து வருகிறார். ஆனாலும் திவ்யாவுடன் மீண்டும் சேர்ந்து வாழவே விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கிடையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய திவ்யா, அரணவ் அளித்த புகாரில் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு திடீரென வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நண்பர்களுடன் சென்று மீண்டும் சிகிச்சை பெற்றார்.

அரணவ், என்னை மதம் மாற கட்டாயப்படுத்தினார். நான் முஸ்லிமாக மதம் மாறிய பின்னரே திருமணம் செய்து கொண்டார். இதற்கு தமிழக முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னுடன் ஒரே வீட்டில் 45 நாட்கள் பேசாமல் இருந்தார். எனது செல்போன் எண்ணை 'பிளாக்' செய்து விட்டார்.

எனது உடல் நலம் சரியான உடன் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகுவேன். இது தொடர்பாக அரணவின் பெற்றோர் கேட்க வேண்டும். அவர்களது குடும்ப வாரிசு எனது வயிற்றில் வளர்கிறது. தற்போது டாக்டர்களை சந்தித்து சிகிச்சை பெற்றேன்.

குழந்தை நலமாக இருப்பதாக தெரிவித்தனர். இவ்வாறு திவ்யா கூறிவிட்டு காரில் ஏறி புறப்பட்டு சென்றார். இதற்கிடையில் நேற்று தனது மனைவி திவ்யா, மனநல ஆலோசகரிடம் சிகிச்சை பெற்று வருவதாகவும், அதற்கான மருத்துவ சீட்டையும், அவர் தன்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ காட்சியையும் அரணவ் வெளியிட்டார்.

அதில் திவ்யா, அரணவ் உடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சியும், சண்டையிடும் காட்சிகளும் பதிவாகி இருந்தது. கணவன், மனைவி இருவரும் மாறி, மாறி ஒருவர் மீது ஒருவர் புகார்களை கூறி வருவதுடன், தங்களது தரப்பில் உள்ள ஆதாரங்களையும் வெளியிட்டு வருவது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.