பாடசாலைக் கல்வி மற்றும் பரீட்சை முறையை மாற்றியமைக்கத் தீர்மானம்!
எதிர்காலத்தில் ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான புதிய தலைமுறையை உருவாக்குவதற்கு சிறந்த கல்விக் கொள்கையுடன் கூடிய சத்தான உணவுகளை வழங்குவதும் மிகவும் அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
ஆரோக்கியமான சுறுசுறுப்பான தலைமுறை என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டின் பாடசாலைக்கான சத்துணவு திட்டம் இன்று ஜனாதிபதியினால் நாரஹேன்பிட்டி சுஜாதா மகளிர் கல்லூரியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” பாடசாலைக்கான காலை உணவுத் திட்டத்தை இன்று ஆரம்பித்துள்ளோம். அரசாங்கத்தின் எதிர்பார்ப்புகளில் ஒன்றை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பாக இந்த சந்தர்ப்பத்தை நான் பார்க்கிறேன்.
சர்வதேச ரீதியில் பல நாடுகள் பாடசாலைக்கான உணவு திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. எமது நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. அஸ்வசும திட்டத்தின் மூலம் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு வழங்கப்படும் நிதி நிவாரணத்தை மூன்று மடங்காக உயர்த்தியுள்ளோம்.
நாட்டில் நவீன கல்வி முறையை உருவாக்குவதற்கு நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். 2030 ஆம் ஆண்டிற்குள் புதிய கல்வி முறையை நாம் உருவாக்க வேண்டும். அந்த வேலைதிட்டத்தை நாம் தற்போது செயற்படுத்தி வருகிறோம். ஒவ்வொரு பாடசாலையிலும் செயற்கை நுண்ணறிவு திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
நவீன தொழில்நுட்பத்துடன் நாம் முன்னேற வேண்டும். அந்த தொழில்நுட்ப அறிவை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.
அதன்படி, பாடசாலைக் கல்வி மற்றும் பரீட்சை முறையை மாற்றியமைப்பது குறித்து கவனம் செலுத்தியுள்ளோம்” இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.