கரூர் சம்பவத்திற்கு புலனாய்வு விசாரணை.

07.10.2025 14:01:35

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் புலனாய்வு விசாரணை கோரி, இந்திய உச்ச நீதிமன்றத்தில் பாரத ஜனதா கட்சியின் நிர்வாகி உமா ஆனந்தன் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

 

இந்த மனுவை எதிர்வரும் ஒக்டோபர் 10ம் திகதி தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளது.

கரூரில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தேர்தல் பிரசாரத்தில், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்திய உயர் நீதிமன்ற உத்தரவுபடி, காவல்துறைத் தலைவர் அஸ்ரா கார்க் தலைமையிலான குழுவினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சம்பவத்துக்கு புலனாய்வு விசாரணை கோரி விஜய் கட்சியினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது.

இதே கோரிக்கையை வலியுறுத்தி பாரத ஜனதா கட்சியின் நிர்வாகி இந்திய உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.