ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் மரணம்:
ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதை இஸ்ரேல் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் படுகொலைகளுக்கு காரணமாக இருந்த ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார்(Yahya Sinwar) நேற்று இஸ்ரேலிய பாதுகாப்பு படை வீரர்களால் கொல்லப்பட்டுள்ளார். |
இருப்பினும், அவரது உடலில் இருந்த எடுக்கப்பட்ட டிஎன்ஏ-களை பரிசோதனை செய்து அவர் உறுதியாக கொல்லப்பட்டதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து வருவதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் இஸ்ரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் வெளியிட்டுள்ள தகவலில், ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டது இஸ்ரேலிய ராணுவத்தின் மிகப்பெரிய ராணுவ சாதனை என்றும் தெரிவித்துள்ளார். ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டு இருப்பது, பணயக் கைதிகள் விடுவிப்பு மற்றும் காசாவில் புதிய யதார்த்தத்தை உருவாக்க வழிவகுக்கும் எனவும் காட்ஸ் குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஏர்போர்ஸ் ஒன் கப்பலில் இருந்து தொடர்பு கொண்ட ஜோ பைடன், இஸ்ரேலிய இராணுவத்தின் சிறந்த செயலுக்காக பாராட்டியதாக இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளார். |