மிகப்பெரும் துரோகம் !

22.05.2022 16:40:50

சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபயவின் கைகளால் அமைச்சுப் பதவியைப் பெற்று மக்களுக்கு பெரும் துரோகத்தினை ஹரின் இழைத்திருக்கிறார் என்றும், அவரின் பொய் வேசத்தை கோட்டாபய அம்பலப்படுத்தியிருக்கிறார் என்றும்  நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர், 

அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ முதலில் அரச தலைவருடன் இணக்கப்பாட்டுக்கு வந்து, பதவிப் பிரமாணம் செய்யும் புகைப்படங்கள் மற்றும் காணொளியை ஊடகங்களுக்கு வழங்காதிருக்க திட்டமிட்டிருந்தார்.

எனினும் ஹரின் வெளியில் வந்து ஊடகங்களில் தன்னை பற்றி பெருமை பேசியதன் காரணமாக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்யும் புகைப்படம் மற்றும் காணொளியை அரச தலைவரின் ஊடகப் பிரிவு ஊடகங்களுக்கு வெளியிட்டு ஹரின் பெர்னாண்டோவின் காற்சட்டை கழற்றி அம்பலப்படுத்தியுள்ளது.

இறுதியில் கோட்டா கோ ஹோம் எனக் கூறியவர்கள், கோட்டாவின் கைகளில் இருந்து நியமனக் கடிதங்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.

இந்த செயலானது இவர்கள் மக்களுக்கு செய்த துரோகம் மட்டுமல்ல மிகப் பெரிய காட்டிக்கொடுப்பு. நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த அமைச்சு பதவிகளை பெற்றே ஆக வேண்டுமா?.

அமைச்சு பதவிகளுக்கு அப்பால் வேறு கொடுக்கல், வாங்கல்கள் நடந்தா என்பது எங்களுக்கு தெரியாது. நாங்களும் நாடாளுமன்றத்திற்குள் இருக்கின்றோம், எங்களுக்கும் தகவல் கிடைக்கும்.

எவ்வளவு கைமாறியது போன்ற விடயங்கள் கிடைக்கும். அப்போது, தொகையுடன் தகவல்களை வெளியிடுவோம் என்றார்.