ரஷிய ஏவுகணை தாக்குதல்

28.02.2022 09:43:53

உக்ரைன் மீது ரஷியா போர்தொடுத்து இன்றுடன் 5 நாட்கள் ஆகிறது. முக்கிய நகரங்கள் மீது குண்டுகளை பொழிந்தும், ஏவுகணைகளை வீசியும் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

உக்ரைனின் ராணுவ நிலைகளை குறிவைத்து ரஷியா இந்த அதிரடியில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் உக்ரைன் தலைநகர் கிவ்வில் உள்ள அணு உலை கழிவு மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. இதை ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சர்வதேச அணுசக்தி முகமையின் இயக்குனர் ஜெனரல் ரபெல் குரோஸ்சி கூறியதாவது:-

கிவ்வில் உள்ள அணு உலை கழிவு மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக நேற்று இரவு உக்ரைன் அதிகாரிகள் எங்களுக்கு தெரிவித்தனர்.

இந்த தாக்குதலில் அணு உலை கழிவு கட்டிடம் சேதம் அடைந்ததா? என்ற தகவல் தெரியவில்லை. அணு உலை கழிவு சேதம் அடைந்திருந்தால் மனித ஆரோக்கியத்திற்கும், சுற்றுச் சூழலுக்கும் கடுமையான விளைவுகள் ஏற்படக்கூடும்.

அந்த தாக்குதலுக்கு உள்ளான கட்டிடத்தை ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.