வங்கக்கடலில் புயல் சின்னம்.

11.10.2026 11:16:32

தென்கிழக்கு வங்கக் கடலில் அக்டோபர் 13-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மலாக்கா ஜலசந்தி பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக இந்த புதிய புயல் சின்னம் உருவாகிறது.

இது வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து, சுமார் 4 நாட்களில் அதாவது அக்டோபர் 17-ஆம் தேதியளவில் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா இடையே கரையை கடக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கம் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16-ல் தொடங்கி ஜனவரி வரை நீடித்த நிலையில், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாததால் நிலவிய நீர் பற்றாக்குறையை இந்த புதிய புயல் சின்னம் போக்கும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். பருவமழை தொடங்குவதற்கான முன்னோட்டமாக இந்த நிகழ்வு பார்க்கப்படுகிறது.