ரஷ்யாவின் உக்கிர தாக்குதலை திறம்பட சமாளிக்கும் வகையிலான, அதிநவீன ஆயுத தொகுப்பை வழங்கும் பிரித்தானியா!

22.07.2022 12:35:06

ரஷ்யாவின் உக்கிர தாக்குதலை திறம்பட சமாளிக்கும் வகையிலான, அதிநவீன ஆயுத தொகுப்பை வழங்கவுள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.

இதன்படி, டசன் கணக்கான பீரங்கித் துப்பாக்கிகள், நூற்றுக்கணக்கான ஆளில்லா விமானங்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான வெடிமருந்துகள் பிரித்தானியா மூலம் எதிர்வரும் வாரங்களில் உக்ரைனுக்கு அனுப்பப்பட உள்ளன.

இதுகுறித்து பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் கூறுகையில், ‘உக்ரைனியர்களுக்கு புடினின் சட்டவிரோத படையெடுப்பில் இருந்து தங்கள் நாட்டை பாதுகாக்கும் கருவிகள் இருப்பதை இந்த தொகுப்பு உறுதி செய்யும்’ என கூறினார்.

பிரித்தானியாவின் சமீபத்திய ஆதரவில் 20 எம்.109 155எம்.எம். தானியங்கி துப்பாக்கிகள் மற்றும் 36 எல்.119 105எம்.எம். பீரங்கி துப்பாக்கிகள் அடங்கும் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உக்ரேனின் சோவியத் கால பீரங்கிகளுக்கு பதிலளிக்கும் வகையில், மேலும் 50,000 வெடிமருந்துகள், ஆளில்லா விமானங்கள் மற்றும் குறைந்தது 1,600 டாங்கி எதிர்ப்பு ஆயுதங்களும் அடங்கும்.

இந்த அறிவிப்பு கடந்த மாதம் உக்ரைனிற்கு இராணுவ ஆதரவில் 1 பில்லியன் பவுண்டுகள் வழங்குவதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து வருகிறது. கிழக்கு உக்ரைனில் இராணுவ கவனம் மட்டுப்படுத்தப்படவில்லை என்று ரஷ்யா கூறியுள்ளது.

கடந்த புதன்கிழமை அரச ஊடகத்திற்கு அளித்த செவ்வியில், வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், ‘மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு அதிக சக்திவாய்ந்த ஆயுதங்களை வழங்கிய பிறகு ரஷ்யாவின் மூலோபாயம் மாறிவிட்டது’ என்று மறைமுகமாகக் கூறினார்.