
இந்தியா எந்த மத்தியஸ்தத்தையும் ஏற்கவில்லை .
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத ஏவுதளங்களுக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடனான 35 நிமிட தொலைபேசி உரையாடலில் விளக்கினார்.
இஸ்லாமாபாத்தின் வேண்டுகோளுக்குப் பின்னர் தான் இந்தியா போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக இதன்போது பிரதமர் மோடி, ஜனாதிபதி டெனால்ட் டரம்பிடம் தெளிவுபடுத்திதாக இந்திய வெளிவிவகாரச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி புதன்கிழமை (18) தெரிவித்தார்.
கனடாவின் ஆல்பர்ட்டாவில் நடைபெற்ற ஏழு நாடுகளின் தலைவர்கள் கொண்ட ஜி7 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் மோடியும் ஜனாதிபதி ட்ரம்பும் சந்திக்க திட்டமிடப்பட்டிருந்தனர்.
எனினும், ஈரான் மற்றும் இஸ்ரேல் போர் நிலைமையினால் ட்ரம்ப் அமெரிக்காவிற்கு விரைவாகவே திரும்ப வேண்டியிருந்தது.
இதனால், இரு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு நடைபெறவில்லை.
இதன் பின்னர், ட்ரம்பின் வேண்டுகோளின் பேரில், நேற்று (17) இரு தலைவர்களும் தொலைபேசியில் பேசியதாக மிஸ்ரி கூறினார்.
இரு தலைவர்களும் இதன்போது சுமார் 35 நிமிடங்கள் பேசியதாக அவர் மேலும் கூறினார்.
ஏப்ரல் 22 ஆம் திகதி பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர், ட்ரம்ப், மோடியுடன் தொலைபேசியில் பேசி இரங்கல் தெரிவித்தார்.
மேலும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஆதரவையும் தெரிவித்தார்.
அதன் பின்னர் அவர்கள் பேசுவது இதுவே முதல் முறை.
எனவே, பிரதமர் மோடி ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து ஜனாதிபதி ட்ரம்புடன் விரிவாகப் பேசினார் என்றும் இந்திய வெளிவிவகாரச் செயலாளர் கூறினார்.
இந்த உரையாடலின் போது, பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் கடுமையான நிலைப்பாட்டை பிரதமர் மோடி அடிக் கோடிட்டுப் பேசினார்.
மேலும் பாகிஸ்தானுடனான ஜம்மு-காஷ்மீர் பிரச்சினையைத் தீர்ப்பதில் அமெரிக்கா அல்லது எந்த மூன்றாம் தரப்பினரின் மத்தியஸ்தத்தையும் புது டெல்லி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்றும் கூறினார்.
மே 6-7 இரவு, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை மட்டுமே இந்தியா குறிவைத்ததாகவும் மோடி, ட்ரம்பிடம் இதன்போது வலியுறுத்தினார்.
மே 9-10 இரவு, பாகிஸ்தான் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா ஒரு சக்திவாய்ந்த பதிலடியை வழங்கியது.
இந்தியப் படைகள் பாகிஸ்தான் இராணுவத்திற்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தின.
மேலும் அவர்களின் பல விமான தளங்களை செயலிழக்கச் செய்தன.
இதனால் பாகிஸ்தான் இராணுவ நடவடிக்கையை நிறுத்துமாறு கோர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்த நிகழ்வுகளின் போது எந்த நேரத்திலும் இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் அல்லது இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே அமெரிக்க மத்தியஸ்தம் குறித்து எந்த விவாதமும் நடைபெறவில்லை என்று பிரதமர் மோடி ஜனாதிபதி ட்ரம்பிடம் தெளிவுபடுத்தியதாக மிஸ்ரி கூறினார்.