கொவிட் மரணங்கள் தொடர்பில் போலியான தகவல்களை பரப்பிய நபர் கைது!

24.08.2021 06:00:00

கொரோனா மரணங்கள் தொடர்பான படங்களை போலியான வகையில் சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் குறித்த சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாடுகளில் நிகழ்ந்த கொரோனா மரணங்கள் தொடர்பான படங்களை இலங்கையில் நிகழ்ந்த மரணங்கள் என குறிப்பிட்டு அவர் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

களுபோவில வைத்தியசாலையில் நோயாளர் சிகிச்சை அறையில் கொரோனா மரணங்களினால் உயிரிழந்தவர்களின் சரீரங்கள் ஆங்காங்கே காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

கைதானவர் நுகேகொடை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி நீதிமன்றில் மீண்டும் முன்னிலையாகுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.