சமூக ஊடகத் தடையை நீக்கிய நேபாளம்!

09.09.2025 08:01:33

19 பேர் உயிரிழந்த போராட்டங்களைத் தொடர்ந்து, சமூக ஊடகத் தடையை நேபாளம் நீக்கியுள்ளது.

 

தலைநகர் காத்மாண்டுவில் உள்ள நாடாளுமன்றக் கட்டிடத்திற்குள் திங்கள்கிழமை ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வலுக்கட்டாயமாக நுழைந்து, பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக ஊடக தளங்கள் மீதான தடையை நீக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

ஊழலை எதிர்த்துப் போராடவும் அவர்கள் அழைப்பு விடுத்தனர்.

நிலைமையைக் கருத்திற் கொண்டு திங்கள்கிழமை (08) இரவு நடைபெற்ற அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர், சமூக ஊடகத் தடையை நீக்குவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந் நாட்டு தகவல் தொடர்பு மற்றும் தகவல் அமைச்சர் பிருத்வி சுப்பா குருங் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், தலைநகருக்கு வெளியே உள்ள நகரங்களிலும் நடந்த போராட்டங்களில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

நேபாளத்தில் மில்லியன் கணக்கான பயனர்கள் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக தளங்களை நம்பியுள்ளனர்.

அவர்கள் பொழுதுபோக்கு, செய்திகள் மற்றும் வணிகத்திற்காக அவற்றை அணுகுகின்றனர்.

ஆனால், அரசாங்கம் கடந்த வாரம், போலி செய்திகள், வெறுப்புப் பேச்சு மற்றும் ஆன்லைன் மோசடிகளுக்கு எதிரான நடவடிக்கை என்ற போர்வையில் சமூக ஊடகங்கள் தொடர்பான தடையை அமுல்படுத்தியது.

 

இதற்கு எதிராக திங்களன்று வீதிகளில் இறங்கிய இளைஞர்கள், அரசாங்கத்தின் சர்வாதிகார அணுகுமுறையை எதிர்த்துப் போராடுவதாகக் கூறினர்.

சில போராட்டக்காரர்கள் பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் சொந்த ஊரான டமாக்கில் உள்ள அவரது வீட்டின் மீதும் கற்களை வீசினர்.

காத்மாண்டுவில் பொலிஸார் போராட்டக்காரர்களை கலைக்க தண்ணீர் பீரங்கி தடியடி பயன்படுத்தியதுடன் இறப்பர் தோட்டாக்களால் சுட்டனர்.

பிரதமர் கே.பி. சர்மா ஒலி, வன்முறை மற்றும் உயிரிழப்புகளால் “மிகவும் வருத்தமடைந்தேன்” என்று கூறினார்.

அத்துடன், போராட்டங்களை விசாரிக்க அரசாங்கம் ஒரு குழுவை அமைக்கும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் நிதி நிவாரணம் வழங்கும் என்றும் காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் என்றும் அவர் உறுதிபடுத்தினார்.

இதனிடையே, போராட்டங்களின் போது தனது நிர்வாகம் பலத்தைப் பயன்படுத்தியது குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தமையினால், உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் மாலையில் தனது இராஜினாமாவை வழங்கினார்.

 

கடந்த வாரம், நேபாளத்தின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சில் பதிவு செய்வதற்கான காலக்கெடுவை மீறுவதற்காக 26 சமூக ஊடக தளங்களைத் தடை செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

சமூக ஊடகங்களைத் தடை செய்யவில்லை, ஆனால் அவற்றை நேபாள சட்டத்தின்படி கொண்டு வர முயற்சிப்பதாக நேபாள அரசாங்கம் வாதிட்டமையும் குறிப்பிடத்தக்கது.