மகள் திருமணத்தை வீட்டிலேயே நடத்திய ரமேஷ் அரவிந்த்

30.12.2020 13:27:50

 தமிழில் கேளடி கண்மணி, டூயட், சதிலீலாவதி படங்களில் நடித்து பிரபலமான நடிகர் ரமேஷ் அரவிந்த், தனது மகள் திருமணத்தை வீட்டிலேயே நடத்தி இருக்கிறார்.

கர்நாடகாவைச் சேர்ந்த நடிகர் ரமேஷ் அரவிந்த், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என வெவ்வேறு மொழிகளில் 140 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். குறிப்பாக தமிழில் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து பல படங்களில் பணியாற்றியுள்ளார். மனதில் உறுதி வேண்டும், உன்னால் முடியும் தம்பி, கேளடி கண்மணி, டூயட், சதிலீலாவதி, ஜோடி, ரிதம், பஞ்சதந்திரம், மும்பை எக்ஸ்பிரஸ், உத்தம வில்லன், என அவரது படங்களை பட்டியலிடலாம்.

இந்நிலையில் ரமேஷ் அரவிந்தின் மகளும், தயாரிப்பு மேலாளருமான நிஹாரிகாவின் திருமண கொண்டாட்ட விழா அவரது இல்லத்தில் ஒரு வார காலம் நடந்தது. இதையடுத்து டிஜிட்டல் வடிவமைப்பாளர் அக்‌ஷய் என்பவரை கரம் பிடித்திருக்கிறார் நிஹாரிகா. இவர்களது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துக் கொண்டனர். 'தொற்றுநோய் காலம் என்பதால் நாங்கள் நினைத்தபடி இந்தத் திருமணத்தை பெரிதாக நடத்த முடியவில்லை. அதனால் அதை சரி செய்ய, வெவ்வேறு நிகழ்வுகளை உள்ளடக்கிய ஒரு வார கொண்டாட்டத்திற்கு திட்டமிட்டோம்' என ரமேஷ் அரவிந்தின் மனைவி அர்ச்சனா இது பற்றி தெரிவித்துள்ளார்.