சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்தை நெறிமுறைப்படுத்தும் திருத்தச் சட்ட மசோதாவை உடன் வாபஸ் பெறுங்கள்

17.03.2024 08:24:55

சிறுமிகள் உள்ளடங்கலாக வயது குறைந்த பிள்ளைகளுக்கு எதிராக அதிகரித்துவரும் பாலியல் துஷ்பிரயோகங்களை நெறிமுறைப்படுத்துவதுடன், தண்டனை விலக்கீட்டு கலாசாரத்தை ஊக்குவிக்கக்கூடிய வகையில் பாலியல் வன்புணர்வு மற்றும் பாலியல் குற்றங்கள் தொடர்பான சட்டத்தில் மேற்கொள்வதற்கென முன்வைக்கப்பட்டிருக்கும் திருத்த முன்மொழிவுகளை அரசாங்கம் உடனடியாக வாபஸ் பெறவேண்டும் என சிவில் சமூகப் பிரதிநிதிகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

பாலியல் வன்புணர்வு மற்றும் பாலியல் குற்றங்கள் தொடர்பான சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான சட்ட மசோதா தொடர்பில் எதிர்ப்பை வெளிப்படுத்தியும், அதனை உடனடியாக வாபஸ் பெறுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியும் பேராசிரியர் சாவித்திரி குணசேகர, பேராசிரியர் தீபிகா உடகம, கலாநிதி மரியோ கோமேஸ், சட்டத்தரணி பவானி பொன்சேகா, சட்டத்தரணி ஏர்மிஸா ரீகல், அருட்தந்தை ஜீவந்த பீரிஸ், சிவில் சமூக செயற்பாட்டாளர் ஷ்ரீன் ஸரூர், ரூக்கி பெர்னாண்டோ ஆகியோர் உள்ளடங்கலாக 150 தனிநபர்களும், சமத்துவம் மற்றும் நீதிக்கான நிலையம், மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான நிலையம், பெண்கள் ஆய்வு நிலையம், வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு என்பன உள்ளடங்கலாக 55 சிவில் சமூக அமைப்புக்களும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

1995ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட தண்டனைச் சட்டக்கோவையானது 18 வயதை அடையாத பிள்ளையொன்று பாலியல் உறவில் ஈடுபடுவதற்குரிய சம்மதத்தை அளிப்பதற்கான (Consent) தகைமை வயதெல்லை 16 எனக் கூறுகின்றது. 

அதன்படி, பாலியல் உறவுக்கு சம்மதம் அளிக்கும் வயதெல்லையை அடையாத சிறுமியுடன் பாலியல் உறவில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமாக வரையறுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், சம்மதம் அளிக்கக்கூடிய தகைமை வயதெல்லையை 16இல் இருந்து 14ஆகக் குறைப்பதற்கு இத்திருத்தச் சட்ட மசோதா முன்மொழிந்திருப்பதை ஏற்கமுடியாது.

இம்முன்மொழிவானது நாட்டில் சிறுமிகள் உள்ளடங்கலாக வயது குறைந்த பிள்ளைகளுக்கு எதிராக அதிகரித்துவரும் பாலியல் துஷ்பிரயோகங்களையும், இவ்விடயத்தில் சட்ட அமுலாக்கம் அடைந்திருக்கும் தோல்வியையும் மிகத் தெளிவாக புறக்கணித்துள்ளது. அதேவேளை இது சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்தை நெறிமுறைப்படுத்துவதுடன், தண்டனை விலக்கீட்டு கலாசாரத்தையும் ஊக்குவிக்கிறது.

மேலும், இத்தகைய பாலியல் துஷ்பிரயோகங்கள் சிறுமிகளின் ஆரோக்கியத்திலும், பொதுவான வளர்ச்சியிலும் தீவிர தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, பருவ வயது கர்ப்பம் காரணமாக சிறுமிகள் பாடசாலைக் கல்வியில் இருந்து இடைவிலக நேரிடுவதுடன், அவர்கள் எச்.ஐ.வி உள்ளிட்ட பாலியல் தொற்றுநோய்களுக்கு உள்ளாகக்கூடிய அச்சுறுத்தலும் உயர்வாகக் காணப்படுகிறது.

சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துவரும் பின்னணியில், நடைமுறையில் உள்ள சட்டத்தை வலுப்படுத்துவதுடன் பாலியல் துஷ்பிரயோகங்களில் இருந்து சிறுவர்களைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டிய சூழ்நிலையில் தண்டனைச் சட்டத் திருத்தமாக இம்மசோதா முன்வைக்கப்பட்டுள்ளமை ஆச்சரியம் அளிக்கிறது. 

எனவே, பாலியல் குற்றங்கள் தொடர்பான சட்டத்தையும் கொள்கையையும் மாற்றக்கூடிய அவசரமானதும், எழுந்தமானமானதும், கண்டனத்துக்குரியதுமான இந்த மசோதாவை வாபஸ் பெறுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.