பிரான்சில் வெளிநாட்டவர்களுக்கு ஏற்படப்போகும் சிக்கல்: வெடித்தது போராட்டம்

28.01.2024 03:09:07

பிரான்சின் சில பகுதிகளில் கடுமையான போராட்டங்கள் வெடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான், இந்தியாவின் சுதந்திர தின விழாக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக இந்தியா சென்றுள்ள நிலையிலேயே இவ்வாறு போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பிரான்ஸ் அரசு புதிய புலம்பெயர் சட்டமொன்றை நிறைவேற்றும் முயற்சியில் தீவிரமாக செயற்பட்டு வருகிறது.

 

இந்நிலையில், குறித்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடமேற்கு பிரான்சில் Brittany பகுதியில் மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

குறித்த சட்டம், விரும்பத்தகாதவர்கள் என கருதப்படும் வெளிநாட்டவர்களை நாடுகடத்துவதை எளிதாக்குகிறது, வெளிநாட்டவர்கள் அரசு உதவிகளை பெறுவதையும், பிரான்ஸ் நாட்டில் வாழும் வெளிநாட்டவர்கள் தங்கள் குடும்பத்தினரை பிரான்சுக்கு அழைத்துவருவதையும் கடினமாக்குகிறது.

போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான மக்கள் காவல்துறையினர் மீதும் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளதோடு, கண்ணாடிக் கதவு ஜன்னல்கள் உடைந்துள்ளன, குப்பைத்தொட்டிகள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன.

 

அதேவேளை, அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்படுகின்ற வேளை, போராட்டக்காரர்களை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை பிரயோகித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.