திருவள்ளூர் அமோனியா வாயு கசிவு சம்பவம்.
|
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த கன்னிகைபேர் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை இயங்கி வந்தது. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அங்கேயே தங்கி பணியாற்றி வந்தனர். இத்தகைய சூழலில் கடந்த ஜூன் மாதம் 21ஆம் தேதி (21.06.2026) காலை சுமார் நூற்றுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் திடீரென அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. |
|
இதில் 83 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இந்த வாயுக் கசிவு விபத்தில் 18 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து ஆலையில் இருந்த அமோனியாவை முழுமையாக அகற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. அதன்படி தீயணைப்புத் துறை, மருத்துவத் துறை, பேரிடர் மீட்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்புடன், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் குழாய்கள் மூலம் சேமிப்புக் கலன்களில் இருந்த அமோனியா வாயு முழுமையாக அகற்றப்பட்டது. மொத்தம் 2.75 டன் அமோனியா வாயு அகற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆலைக்குச் சீல் அதிகாரிகள் வைத்தனர். அதோடு இந்த ஆலைக்கு நிரந்தரமாகச் சீல் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆலைக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. |