உங்களை நாங்கள் மறக்கமாட்டோம் - புட்டின் இல்லாத ரஸ்யா என கோசம்

02.03.2024 10:10:48

கடும் பாதுகாப்பு கெடுபிடிகளையும் மீறி ஆயிரக்கணக்கான ரஸ்ய மக்கள் எதிர்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னியின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டுள்ளனர் 

ரஸ்ய ஜனாதிபதியை கடுமையாக விமர்சித்த  அலெக்ஸி நவால்னி 16 ம் திகதி சிறையில் உயிரிழந்தார்.

இது தொடர்பில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது குற்றம் என அதிகாரிகள் எச்சரித்திருந்தனர்.

 

பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டிருந்த போதிலும் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் நவால்னியின் பெயரை  குறிப்பிட்டு கோசங்களை எழுப்பினர்.

நவால்னி பல வருடங்களாக வசித்த ரஸ்யாவின் மர்யினோ பகுதியில் நேற்று இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றவேளை ஆயிரக்கணக்கில் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

கடும் குளிருக்கும் மேல் ஒரு கிலோமீற்றர் தூரத்திற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர் என நவால்னியின் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அங்கு காணப்பட்ட மக்கள் அரசியல் ரீதியில் கோசங்களை எழுப்பினர் எனினும் பொலிஸார் அதில் தலையிடவில்லை.

யுத்தம் வேண்டாம் புட்டின் இல்லாத ரஸ்யா ரஸ்யா சுதந்திரமடையும் என  மக்கள் கோசங்களை எழுப்பினர்.

ஐகோன் ஒவ் அவர் லேடி குயின்ஞ் மை சொரோவ்ஸ் தேவாலயத்தில் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றன .

ரஸ்ய அதிகாரிகள் இறுதிநிகழ்வுகளிற்கு பல இடையூறுகளை ஏற்படுத்தினர்  பிரேதத்தை கொண்டுசெல்வதற்கான வாகனங்கள் கிடைக்க விடாமல் தடுத்தனர் என  நவால்னியின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் நூற்றுக்கணக்கான மக்கள் அந்த பகுதியில் காத்திருந்தனர்  ஜேர்மன் பிரான்ஸ் உட்பட பல நாடுகளின் தூதுவர்களும் அப்பகுதிக்கு சென்றிருந்தனர்.

 

தேவாலயத்திற்குள் சில நிமிடங்களே ஆராதனைகள் இடம்பெற்றன நவால்னியின் உடலிற்கு பலர் அஞ்சலி செலுத்துவதையும் அவரது தாயார் மனைவி காணப்படுவதையும் காண்பிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

அதன் பின்னர் தேவாலயத்தின் மணியோசை கேட்டதும் பிரேதப்பெட்டி வெளியே கொண்டுவரப்பட்டது பூக்களை எறிந்த மக்கள் நாங்கள் உங்களை மறக்கமாட்டோம் என கோசம் எழுப்பினர்.