40க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்!

01.03.2023 10:26:38

அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வரிக் கொள்கையை நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 01 ஆம் திகதி புதன்கிழமை காலை 7 மணிமுதல் 2 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7 மணி வரை சுகாதாரம் , பெற்றோலியம், துறைமுகம், மின்சாரம், நீர்வழங்கல் , கல்வி மற்றும் வங்கிகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 40க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.

பெப்ரவரி 22ஆம் திகதி முதல் கருப்பு வாரத்தைப் பிரகடனப்படுத்திய தொழிற்சங்கங்கள் அன்றைய தினம் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் பாரிய ஆர்ப்பாட்டத்தினையும் முன்னெடுத்திருந்தன. இந்நிலையில் இது தொடர்பில் கடந்த சனிக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தொழிற்சங்கங்களுக்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பு இணக்கப்பாடின்றி நிறைவடைந்தது.

எனவே தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ள தொழிற்சங்கங்கள் , அதன் ஆரம்பமான இன்றைய தினம் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன. தமது வேலை நிறுத்த போராட்டத்தினை முடக்குவதற்காகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அத்தியாவசிய சேவைகளைப் பிரகடனப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் , எனினும் தாம் அதனைக் பொருட்படுத்தப் போவதில்லை என்றும் அவை அறிவித்துள்ளன.

எவ்வாறிருப்பினும் மருத்துவ சேவைகள் அத்தியாவசியமானவை என்பதால் பொது மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தாதிருப்பதற்காக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் அதே வேளை , தமது பணிகளை தடையின்றி முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும் இன்றைய வேலைநிறுத்த போராட்டத்தின் பின்னரும் தீர்வு வழங்கப்படாவிட்டால் சேவைகளை நிறுத்தி எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளதாகவும் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார். அதற்கமைய இன்றைய தினம் கல்வி சேவை நிறுவனங்கள் , வைத்தியசாலைகள் மற்றும் வங்கிகள் உள்ளி;ட்டவற்றில் கருப்பு கொடியேந்தி எதிர்ப்பினை வெளியிடவுள்ளதாகவும் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.