புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்துக்கு விரைவில் 106 ஏக்கர் நிலம்

13.09.2021 08:27:13

புதுச்சேரி விமான நிலைய விரிவாக்க திட்டத்திற்கு, மத்திய அரசு நிதி வழங்க அனுமதித்துள்ளதால்,தமிழக அரசிடம் இருந்து 106 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியின் பொருளா தாரம் சுற்றுலாவை சார்ந்தே உள்ளது. இதனால், சுற்றுலாவை மேம்படுத்திட அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. லாஸ்பேட்டையில் விமான நிலையம் துவங்கப்பட்டது.முதல் முறையாக பெங்களூருவில் இருந்து புதுச்சேரிக்கு விமானம் இயக்கப்பட்டது. ஏர் இந்திய நிறுவனம் மூலம் புதுச்சேரி - பெங்களூரு இடையே விமான சேவை துவங்கப்பட்டது. இதற்கு போதிய வரவேற்பு இல்லாததால் விமான சேவை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், மத்தியில் மோடி தலைமையிலான பா.ஜ., அரசு பொறுப்பேற்றதும் புதிய விமான கொள்கையை அறிவித்தது. இதற்காக 'உடான்' திட்டத்தின் கீழ் சிறு நகரங்களை வான்வழியே இணைத்திட விமான நிறுவனங்களில் பாதி கட்டணத்தை மத்திய அரசே ஏற்கும் என அறிவித்தது.அதையடுத்து, கடந்த 2017ம் ஆண்டு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் புதுச்சேரி - ஹைதராபாத் இடையே விமான சேவையை துவக்கியது. இருப்பினும், தற்போது முறையான விமான சேவை இல்லை. பெரிய ரக விமானங்கள் வந்து சென்றால் மட்டுமே பயணிகளிடம் வரவேற்பு இருக்கும் என்ற நிலை உள்ளது.ஓடுதளம் தேவைதற்போது உள்ள ஓடுதளம் 1,502 மீட்டர் நீளத்திற்கு மட்டுமே உள்ளது. இதில் சிறு விமானங்கள் மட்டுமே வந்து செல்ல முடியும். ஓடுதளம் 3,300 மீட்டர் இருந்தால்தான் பெரிய விமானங்கள் வந்து செல்ல முடியும்.

அதனால், விமான நிலையத்தை விரிவாக்கம் செய்திட புதுச்சேரி அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.அதில், பெரிய ரக விமானம் வருவதற்கு கூடுதலாக 1,800 மீட்டர் ஓடுதளம் அமைக்க, 240 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதற்காக விமான நிலையத்தை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளான விழுப்புரம் மாவட்டம், வானுார் தாலுகாவை சேர்ந்த மொரட்டாண்டி, ஆரோவில் பகுதிகளிலிருந்து கூடுதல் நிலம் ஆர்ஜிதம் செய்ய வேண்டும்.இதுதொடர்பாக கவர்னர் தமிழிசை, சமீபத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, விமான நிலைய விரிவாக்கத்திற்கு தமிழகப் பகுதியில் நிலம் கையகப்படுத்தி தர கோரிக்கை விடுத்தார்.மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்திய சிந்தி யாவை போனில் தொடர்பு கொண்டு, புதுச்சேரியில் கொரோனா காரணமாக நிறுத்திய விமான சேவையை துவங்க வேண்டும்.

இரவில் விமானம் இறங்க வசதியாக ஓடு பாதையை விரிவுப்படுத்த வேண்டும். சர்வதேச விமானங்கள் வந்து செல்வதற்கான ஏற்பாடுகள் செய்திட வலியுறுத்தினார்.விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக புதுச்சேரி அரசு சார்பில் மத்திய அரசிடம் விளக்கப்பட்டது. அதனையொட்டி, மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையை தொடர்ந்து, தமிழக அரசு தற்போது முதல்கட்டமாக 106 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி தர ஒப்புக் கொண்டுள்ளது.இதனால், தமிழக அரசு நிலம் கையகப்படுத்தி வழங்கிய உடன், மத்திய விமான போக்குவரத்து துறை சார்பில், புதுச்சேரி விமான நிலைய விரிவாக்க பணிகள் நடைபெற உள்ளது.