'ஐசியு நிரம்பியது' சீனாவை பந்தாடும் கொரோனா...!
மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதுவதாகவும், ஐசியு நிரம்பிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் பெருமளவு குறைந்துவிட்ட நிலையில் தற்போது வைரஸ் சீனாவில் தலைதூக்கத்தொடங்கிவிட்டது. 2019-ம் ஆண்டு சீனாவின் வுகான் மாகாணத்தில் கொரோனா கண்டறியபட்டபோதும் தொடக்கத்தில் அந்நாட்டில் அதிக பாதிப்பை ஏற்படுத்தவில்லை. கடுமையான ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் சீனாவில் கொரோனா கட்டுக்குள் இருந்தது. கடந்த 2 ஆண்டுகளாக உலகின் பிற பகுதிகளில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி லட்சக்கணக்கில் உயிர்களை காவு வாங்கியது. ஆனால், விஞ்ஞானிகளின் தீவிர முயற்சியால் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு கொரோனா வைரஸ் பரவல் கிட்டத்தட்ட முறியடிகப்பட்டது.
மக்கள் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டனர். இந்நிலையில், தொடக்கத்தில் சீனாவில் பாதிப்பை ஏற்படுத்தாத கொரோனா தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் தனது கோர முகத்தை காட்டத்தொடங்கிவிட்டது. கடந்த 1-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை சீனாவில் மட்டும் 24 கோடியே 80 லட்சம் பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக ஒரே நாளில் அதிகபட்சமாக 3 கோடியே 70 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.