இங்கிலாந்து அணிக்கெதிரான எஞ்சிய டெஸ்ட் போட்டியிலிருந்து கைல் ஜேமிசன் விலகல்!

21.02.2023 23:07:18

நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்து வீச்சு சகலதுறை வீரரான கைல் ஜேமிசன் உபாதைக் காரணமாக, இங்கிலாந்து அணிக்கெதிரான எஞ்சிய டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

 

கடந்த வருடம் ஜூன் மாதம் இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்தின்போது ஜேமிசனுக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. அன்று முதல் அவர் சர்வதேச போட்டிகள் எதிலும் விளையாடவில்லை.

இந்தநிலையில், சொந்த மண்ணில் நடைபெறும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு அவர் தேர்வானார்.

அதற்காக பயிற்சி மேற்கொண்ட போது, அந்த காயத்தின் தன்மை பெரிதாகியதால், இங்கிலாந்து அணிக்கெதிரான எஞ்சிய டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

இதனிடையே, அவர் இந்த வாரம் முதுகில் ஏற்பட்ட காயத்துக்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளார்.

அத்துடன், நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த கைல் ஜேமிசன், இத்தொடரில் விளையாடுவதும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.