இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட இந்தியாவிற்கு உரிமையில்லை

31.01.2023 22:03:53

பதின்மூன்றாவது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்த தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆணை இல்லை எனவும், அவ்வாறு அதனை அவர் நடைமுறைப்படுத்த  69 இலட்சம் மக்கள் ஆணை வழங்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர உள்ளிட்ட குழுவினர் அஸ்கிரி மகா விகாரைக்கு வருகை தந்து மகாநாயக்கர் உட்பட சங்க சபைக்கு தெரிவித்துள்ளனர்.

அஸ்கிரி பீடத்தைச் சேர்ந்த வணக்கத்திற்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரை. இன்றையதினம் (31ஆம் திகதி)  நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், சுதத் குணசேகர, கல்யாண திரணகம, வசந்த பண்டார, கலாநிதி கபில குணவர்தன உள்ளிட்டோர் சந்தித்தனர். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

 ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆணை இல்லை

“நிறைவேற்று அதிபரை மக்களே நியமிக்க வேண்டும் என அரசியலமைப்பு கூறுகிறது. ஆனால் இந்த அதிபர், எம்.பி.க்களால் நியமிக்கப்பட்டுள்ளார். கோட்டாபய ராஜபக்சவுக்கு அதிபராக வருவதற்கு வாக்களித்த அறுபத்து ஒன்பது இலட்சம் மக்களின் அபிலாஷையானது, நாட்டின் ஒற்றுமையை பிளவுபடாமல் பேணிக்காப்பதாகும். புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு அந்த ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவால் நம்மீது கட்டாயப்படுத்தப்பட்டது. அது மக்களால் அங்கீகரிக்கப்படவில்லை. இந்த அரசியலமைப்புத் திருத்தம் ஒன்றுபட்ட நமது நாட்டை ஒன்பது துண்டுகளாக உடைத்தது. ஜே.ஆர்.ஜெயவர்தன கூட சில தடைகளுடன் 13ஐ நடைமுறைப்படுத்தினார். காணி அதிகாரங்கள், காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. முதலமைச்சருக்கு மேல் மத்திய அரசின் சார்பில் ஆளுநர் ஒருவர் நியமிக்கப்பட்டார்.

13ஐ வைத்து முழுமையாகக் கூட்டாட்சி

 

நாட்டின் ஒற்றுமையைக் காக்க ஏராளமானோர் உயிர் தியாகம் செய்துள்ளனர். மேலும் பலர் ஊனமுற்றுள்ளனர். இப்படிப் பாதுகாக்கப்பட்ட நாடு முழுவதுமாக 13ஐ வைத்து முழுமையாகக் கூட்டாட்சியாக்க அனுமதிக்கப்படுமா என்ற கேள்வியைக் கேட்க வேண்டும்.

ஐம்பது வீதத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொழும்பில்  சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுடன் வாழ்கின்றனர். இதனை தமிழ் மக்கள் விரும்பவில்லை. பிரிவினைவாத சிங்கள மற்றும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு இது தேவையாக உள்ளது. எமது மாகாணங்கள் இன ரீதியாக பிரிக்கப்படக் கூடாது என்றார்.