ஐரோப்பாவை குறிவைக்கும் அமெரிக்கா!

16.09.2025 07:51:08

ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் இந்தியா மற்றும் சீனா மீது ஐரோப்பிய நாடுகள் வரி விதிக்கும் வரையில், சீனா மீது அமெரிக்கா நடவடிக்கை எடுக்காது என்றே அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் எண்ணெய் வருவாயைக் குறைப்பதிலும், உக்ரைனில் அதன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதிலும் ஐரோப்பிய நாடுகள் வலுவான பங்கை வகிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ரஷ்ய விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் தங்கள் பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், ஐரோப்பிய நாடுகளின் ஒத்துழைப்பு இல்லை என்றால் இந்த விவகாரம் முடிவுக்கு வராது என்றும் பெசென்ட் தெரிவித்துள்ளார்.

சீனா மீது வரி விதிக்க மறுக்கும் அமெரிக்கா, ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் இந்தியா மீது வரி விதித்தது. அத்துடன், ரஷ்யாவின் எண்ணெய் வருவாயைக் குறைக்க, சீனா மற்றும் இந்தியா மீது 50% முதல் 100% வரை வரிகளை விதிக்குமாறு ஐரோப்பிய நாடுகளை டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.

மேலும் ரஷ்ய எண்ணெய் வாங்குவது தங்களின் தனிப்ப்ட்ட உரிமை என் சீனா பதிலளித்துள்ளது. இதனிடையே, ரஷ்ய எண்ணெய் வாங்கும் சில ஐரோப்பிய நாடுகளையும் பெசென்ட் விமர்சித்துள்ளார்.

அத்துடன், சிலர் மலிவு விலையில் இந்தியாவிடம் இருந்து பெட்ரோல் தயாரிப்புகளை வாங்குவதையும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அவர்கள் ரஷ்யாவிற்கு மறைமுகமாக நிதியுதவி செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய எண்ணெய் வாங்குபவர்கள் மீது ஐரோப்பிய நாடுகள் வரி விதிக்கும் என்றால் 60 முதல் 90 நாட்களுக்குள் போர் முடிவுக்கு வரும் என உத்தரவாதமளிக்க முடியும் என்றார்.