சஜித்தை சந்தித்த காலி முகத்திடல் அனைத்துக் கட்சிப் போராளிகள்!

14.05.2022 15:44:37

போராட்டத்தை ஒருபோதும் காட்டிக்கொடுக்க மாட்டேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கோரும் சீர்திருத்தங்களுக்கு அமைவான வேலைத்திட்டத்தை நோக்கி தானும் ஐக்கிய மக்கள் சக்தியும் செயற்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காலி முகத்திடல் போராட்டக்காரர்களின் பிரதிநிதிகள் குழுவொன்றை சந்தித்த போதே சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்துள்ளார்.

காலிமுகத்திடல் ஜனநாயகப் போராட்டத்தில் இணைந்துள்ள அனைத்துக் கட்சிப் போராளிகளின் குழுவொன்று இன்று (14) காலை கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சஜித் பிரேமதாசவைச் சந்தித்தது.

தமது கருத்துக்கள் அடங்கிய பிரேரணை ஒன்றை எதிர்க்கட்சித் தலைவரிடம் கையளிப்பதற்காக இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, போராட்ட களத்தின் கோரிக்கைகள் தொடர்பில் தாம் உணர்வுப்பூர்வமாக செயற்படுவதாக சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி கண்டிப்பாக பதவி விலக வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 19வது திருத்தச் சட்டத்தை மீண்டும் கொண்டு வருதல், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை முழுமையாக நீக்குதல், சட்டவாக்க, நிறைவேற்று அதிகாரம் மற்றும் நீதித்துறையை கட்டியெழுப்புதல் போன்ற ஜனநாயக செயற்பாடுகளில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.