விடாமுயற்சி' படப்பிடிப்பு எப்போது...?
'கிரீடம்', 'மங்காத்தா', 'என்னை அறிந்தால்' படங்களைத் தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த 'துணிவு' திரைப்படம் இந்தாண்டு தொடக்கத்தில் வெளியானது. இதனைத் தொடர்ந்து நடிகர் அஜித், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிப்பார் என அறிவிக்கப்பட்டது. பல்வேறு காரணங்களால் விக்னேஷ் சிவன், அந்தப் படத்திலிருந்து விலக்கப்பட்டார். இதையடுத்து, அஜித்தின் அடுத்த படத்தை மகிழ் திருமேனி இயக்குவார் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா அதிகாரபூர்வமாக அறிவித்தது. 'விடாமுயற்சி' என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் நடிகர், நடிகைகள் குறித்து அறிவிப்பு எதையும் படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக கங்கனா ரனாவத், கத்ரினா கைப், கரீனா கபூர் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக முதலில் கூறப்பட்டது. இந்த நிலையில், தற்போது இப்படத்தின் நாயகியாக திரிஷா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை கடந்த மார்ச் மாதமே தொடங்க இருந்தனர். அந்த சமயத்தில் நடிகர் அஜித்தின் தந்தை காலமானதால், அப்படத்தின் ஷூட்டிங்கை தள்ளிப்போட்டனர். இதையடுத்து ஏப்ரல் மாதம் அப்பட ஷூட்டிங் ஆரம்பமாகும் என கூறப்பட்டது. ஆனால் அஜித் தன் உலக பைக் சுற்றுலாவை அம்மாதம் மேற்கொண்டதால் மே மாதத்திற்கு ஷூட்டிங்கை தள்ளிவைத்தனர். தற்போதைய நிலவரப்படி மே மாதமும் இப்பட ஷூட்டிங் ஆரம்பமாக வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. மே 22-ந் தேதி அஜித்தின் விடாமுயற்சி பட ஷூட்டிங் தொடங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. அன்றைய தினம் ஷூட்டிங் குறித்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு திடீர் டுவிஸ்டாக தான் புதிதாக தொடங்கி உள்ள தொழில் குறித்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தார் அஜித். ஏகே மோட்டோ ரைடு என்கிற அந்நிறுவனம் சர்வதேச அளவில் பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொள்பவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள ஒரு நிறுவனம் ஆகும். அஜித் பிசினஸில் பிசியானதால் இம்மாதமும் விடாமுயற்சி பட ஷூட்டிங் தொடங்கப்பட வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. இதன்காரணமாகவே இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாம். ஜூன் மாத இறுதியில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் அஜித் புதிய தோற்றத்தில் காட்சியளிப்பார் என்றும் கூறப்படுகிறது. அஜித்தின் அந்த புது லுக்கை காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.