சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை
புதிய அரசாங்கம் சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையை தனியார் மயப்படுத்தும் திட்டத்தினை கைவிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த தகவலை தேசிய மக்கள் சக்தியின் பேரவையின் தலைவர் பேராசிரியர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தேசிய விமான சேவையான சிறிலங்கன் எயார்லைன்ஸ் நாட்டிற்கு சொந்தமானதாக காணப்பட வேண்டும் என அரசாங்கம் கருதுவதாக அனில் ஜயந்த குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், நஷ்டத்தில் இயங்கும் சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை தனியார் மயப்படுத்தும் முன்னைய அரசாங்கத்தின் திட்டத்தினை ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கைவிடவுள்ளது.
சுற்றுலாத்துறையின் அபிவிருத்திக்கு சிறிலங்கன் எயார்லைன்சின் அவசியத்தை கருத்தில் கொள்ளும்போது நாட்டிற்கு சொந்தமானதாக காணப்பட வேண்டும்.
இதன் காரணமாக சிறிலங்கன் எயார்லைன்சினை தனியார் மயப்படுத்தப்போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அதன் முகாமைத்துவத்தினை சீர்செய்வதற்கான திட்டமொன்று முன்வைக்கப்படும் என பேராசிரியர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.