
நடிகை மீரா மிதுன் ஜாமின் கேட்டு மனு
நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் இருவரும் ஜாமின் கேட்டு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
நடிகை மீரா மிதுன், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் குறித்து அவதுாறாக பேசி, சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டார். இது தொடர்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட பல்வேறு அமைப்புகள், மீரா மிதுன் மீது போலீசில் புகார் அளித்தன.புகாரின் அடிப்படையில், வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட ஏழு பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் ஆஜராகுமாறு, மீரா மிதுனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
விசாரணைக்கு ஆஜராகாமல், மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக், கேரளாவில் தலைமறைவாகினர். 14ம் தேதி இருவரையும் போலீசார் கைது செய்தனர்.சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக், ஜாமின் கேட்டு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.