ரஜினி பட டைட்டில்..
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்கு ரஜினி படத்தின் பெயர் வைக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டு, அதற்கான போஸ்டரும் வெளியாகி உள்ளது. .
தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் "கூலி" படத்தை இயக்கி வருகிறார். இதன் மத்தியில், லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே சில திரைப்படங்களை தயாரித்துள்ள நிலையில், அவர் தயாரிக்கும் அடுத்த படத்திற்கு "மிஸ்டர் பாரத்" என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.ரஜினிகாந்த், அம்பிகா, சத்யராஜ் நடித்த ’மிஸ்டர் பாரத்’ என்ற படம் கடந்த 1986 ஆம் ஆண்டு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படத்தில் பிரபல யுடியூபர் நடிகர் பாரத், நாயகனாக நடிக்கிறார். மேலும், மற்றொரு பிரபல யுடியூபர் நிரஞ்சன் இயக்கத்தில் இந்த படம் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரணவ் முனிராஜ் இசையமைப்பில், ஓம் நாராயணன் ஒளிப்பதிவில், திவாகர் டென்னிஸ் படத்தொகுப்பில் இந்த திரைப்படம் உருவாக உள்ளது. படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.