மிருசுவில் பிள்ளையார் ஆலயத்தை மோதிய டிப்பர் வாகனச் சாரதி கைது

12.06.2021 10:12:28

யாழ். கொடிகாமத்துக்கும் மிருசுவிலுக்கும் இடைப்பட்ட பகுதியிலுள்ள ஆலடி பிள்ளையார் ஆலயத்தின் முன்னால் வீதியோரத்தில் அமைந்துள்ள வழிபாட்டுத் தலத்தை இடித்துவிட்டு தப்பிச்சென்ற டிப்பர் வாகனமொன்று தேடப்பட்டு வந்த நிலையில் கொடிகாமம் பகுதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பில் கருத்து தெரிவித்த புத்தசாசன மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் பிரதமரின் இந்துமத விவகாரங்களுக்கான இணைப்பாளர் சிவஸ்ரீ இராமசந்திர குருக்கள் பாபுசர்மா;

கொடிகாமம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி சி.ஐ. எதிரிசிங்கவுடன் நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, நேற்றுக் காலை உரிய வாகனச் சாரதி கைது செய்யப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனவும் என்னிடம் தெரிவித்திருந்தார்.

மேலும், ஆலய நிர்வாகத்தினர் சேதமடைந்த பகுதியை நிர்மாணிக்க ஆயத்தமாகி வருகின்றபோதிலும் நீதிமன்ற விசாரணையின் பின்னர் இதற்கான நஷ்டஈட்டை உரிய தரப்பினரிடமிருந்து பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.