பேரறிவாளனுக்கு மேலும் 30 நாட்களுக்கு பரோல் நீட்டிப்பு

23.01.2022 09:07:46

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறைக்கைதியாக உள்ள பேரறிவாளனுக்கு மேலும் 30 நாட்கள் பரோல் நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளனுக்கு உடல்நல குறைபாடுகள் ஏற்பட்டன. சிறுநீரக நோய்த்தொற்று மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களால் அவர் அவதிப்பட்டு வந்தார். எனவே பேரறிவாளனுக்கு பரோல் வழங்க வேண்டும் என்று அவரது தாயார் அற்புதம்மாள் கடந்த மே மாதம் முதலமைச்சரிடம் மனு கொடுத்தார்.

 

முதலமைச்சரின்  உத்தரவின் அடிப்படையில் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. இதையடுத்து கடந்த மே மாதம் 28-ந் தேதி ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டுக்குச் சென்று, அங்கு இருந்தபடி பேரறிவாளன் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது தாயார் அற்புதம்மாள் ஒவ்வொரு மாதமும் பரோல் காலம் முடியும்போது அதை நீட்டிக்கக் கோரி தமிழக அரசுக்கு மனு அளித்து வருகிறார். 

 

அதன்படி பேரறிவாளனுக்கு மேலும் 30 நாட்கள் பரோலை நீட்டித்து 21-ந் தேதி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதுதொடர்பான அரசாணையை உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ளார்.   அதன்படி 24-ந் தேதியில் இருந்து மேலும் 30 நாட்களுக்கு அவரது பரோல் காலம், அதற்கான நிபந்தனைகளுக்கு உட்பட்டு நீட்டிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.