அரசாங்கம் வாக்குறுதிகளை மறந்து செயற்பட்டு வருகிறது.

17.03.2026 09:06:00

அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மறந்து செயற்பட்டு வருகிறது. இவர்களால் முடியாது என்பதே இதற்கு காரணமாகும். அதனால் அரசாங்கத்துக்கு முடியாது என்றால் பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தலுக்கு செல்ல வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.

  

காலியில் அமைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சி காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

நாட்டை நிர்வகிப்பவர்கள் உலக நடப்பு தொடர்பில் அறிந்திருக்க வேண்டும். தற்போதுள்ள நிலையில் ஐராேப்பிய நாடுகள் என்ன செய்கிறது. ட்ரம்ப் நிர்வாகம் என்ன செய்கிறது. எமது அண்டை நாடு இந்தியா என்ன செய்கிறது என்ற அறிவு இருக்கவேண்டும். அதனை தற்போது திட்டமிட முடியாது.

நாடொன்றுக்கு வெளிநாட்டு கொள்கை முக்கியமாகும். அதனை சந்தர்ப்பத்துக்கு ஏற்றவகையில் மாற்றிக்கொள்ள முடியாது. பிரச்சினை வருவதற்கு வெளிநாட்டு கொள்கையை காணவேண்டும்.அதனை காண்பதற்கு அது தொடர்பில் அனுபவமுள்ள ஆட்சியாளர்கள் நாட்டில் இருக்க வேண்டும்.

என்றாலும் நாட்டின் துரதிஷ்டவசமாக அவ்வாறான அனுபவம் உள்ள அரச தலைவரான ரணில் விக்ரமசிங்கவை மக்கள் வீட்டில் இருக்கச்சொன்னார்கள். அதனால் தற்போதுள்ள நிலையில் நாட்டின் நிலைமையை முகாமைத்துவம் செய்வது கடினமாகும். அதனால் மக்கள் பாதிக்கப்படுவதை தவிர வேறு எதுவும் இடம்பெறப்போவதில்லை. நாடு எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண இவர்களால் முடியாமல் இருக்கிறது.

அதேநேரம் இவர்கள் எதிர்க்கட்சியில் இருக்கும்போது தெரிவித்தவிடயங்களை மறந்துள்ளார்கள். அவர்கள் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் எதனையும் முறையாக செய்யவில்லை. இவர்களால் முடியாது என்பதே இதற்கு காரணமாகும். அதனால் இவர்களால் முடியாது என்றால் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு செல்ல வேண்டும் என்றார்.