ஈரானின் எண்ணெய் வளங்கள் மீது தாக்குதல் வேண்டாம்.
|
ஈரானின் எண்ணெய் கிணறுகள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று இஸ்ரேலுக்கு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் ஒரு வார காலமாக போர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஈரானின் எண்ணெய் கிணறுகள், எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் சேமிப்பு நிலையங்கள், மற்றும் எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று இஸ்ரேலிடம் அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. |
|
கடந்த வார இறுதியில் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள எண்ணெய் நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை அடுத்து அமெரிக்கா இந்த அறிவுறுத்தலை முன்வைத்துள்ளது. ஆக்ஸியோஸ் செய்தி தளம் வெளியிட்ட தகவலின்படி, அமெரிக்கா இந்த கோரிக்கையை இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகளிடம் முன்வைத்து இருப்பதாக தெரியவந்துள்ளது. அதாவது அமெரிக்காவின் இந்த செய்தி இஸ்ரேலின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் IDF தலைமைத் தளபதி இயல் ஐமீர் ஆகியோருக்கு நேரடியாக வழங்கப்பட்டுள்ளது. எண்ணெய் கிணறுகள் தாக்கப்படுவதால் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக அமெரிக்கா கருதுகிறது, ஈரான் நாட்டில் பொதுமக்கள் பலர் அந்நாட்டு ஆட்சிக்கு எதிராக இருப்பதால், எண்ணெய் நிலையங்கள் தாக்கப்படும் போது அது எதிர்மறையான விளைவுகளை உருவாக்கலாம் என்று அமெரிக்கா கருதுகிறது. ஈரானின் எண்ணெய் வளங்களை இஸ்ரேல் தாக்குவதால், அதற்கு பதிலடியாக ஈரான் சவுதி அரேபியா ஆகிய வளைகுடா நாடுகளில் உள்ள முக்கிய எரிசக்தி மையங்களை தாக்கலாம் என அமெரிக்கா அஞ்சுகிறது. போர் நிறைவுக்கு பிறகு அமெரிக்கா ஈரானுடன் எண்ணெய் ஒத்துழைப்பை விரும்புவதால் அந்த வளங்களை சேதப்படுத்தாமல் இருக்க அமெரிக்கா முயற்சிப்பதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. |