நன்றி அறிவிப்பு கூட்டம் எல்லாம் கிடையாது.. அதுக்கு பதிலா ரத்த தான முகாம்.
தமிழக அரசியல் களம் வழக்கமான தேர்தல் நன்றி அறிவிப்பு கூட்டங்களை மட்டுமே பார்த்து பழகிய ஒன்று. பெரும்பாலான கட்சிகள் தங்களின் வெற்றியை தொடர்ந்து வெறும் வார்த்தைகளாலும் வாக்குறுதிகளாலும் மட்டுமே மக்களுக்கு நன்றி செலுத்துவது வழக்கம். ஆனால், தங்களின் மாற்று அரசியலை செயலில் காட்ட தொடங்கியுள்ளனர் தி.நகர் தொகுதி தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள்.
இதன் ஒரு பகுதியாக, தவெக தலைவர் விஜய் வழிகாட்டுதலின்படி, கோடைகாலத்தில் ஏற்படும் கடுமையான இரத்த தட்டுப்பாட்டை போக்கவும், உன்னதமான உடல் உறுப்பு தான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தி.நகரில் மாபெரும் மக்கள் சேவை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று தி.நகர் உஸ்மான் ரோட்டில் உள்ள தியாகராய நகர் சட்டமன்ற தொகுதி அலுவலக வளாகத்தில் இந்த மாபெரும் இலவச மருத்துவம், இரத்ததானம் மற்றும் உடல் உறுப்பு தான முகாம் நடைபெறுகிறது. மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சரும், தி.நகர் சட்டமன்ற உறுப்பினருமான திரு. என். ஆனந்த் MLA அவர்கள் தலைமையில் நடைபெறும் இம்முகாம் காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெற உள்ளது.
டாக்டர் எஸ். பிரதாப் ராஜன் M.D ஒருங்கிணைப்பில் நடைபெறும் இம்முகாமில் பொது மருத்துவம், இருதய நோய், மகளிர் நலம், எலும்பு நோய், கண் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு இலவசப் பரிசோதனைகளும், மருந்து மாத்திரைகளும் வழங்கப்பட உள்ளன. மக்களை வாழவைக்கும் இந்த உன்னத நற்பணியைத் தவெக-வின் மற்ற தொகுதி நிர்வாகிகளும் தொடர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.