எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு

08.03.2024 08:18:52

நாட்டில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

 

இதன்படி 2023 ஆம் ஆண்டில் 700 எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கையானது கடந்த 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 13 சதவீத அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் அடையாளங் காணப்பட்ட எயிட்ஸ் நோயாளர்களில் 15 முதல் 24 வயதுக்குட்பட்ட 91 ஆண்கள் மற்றும் 5 பெண்கள் உள்ளடங்குவதாகவும் தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.

ஏனையவர்கள் 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டில் எயிட்ஸ் தொற்றுக்குள்ளான 59 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது கடந்த ஆண்டில் ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 309 பேர் எயிட்ஸ் நோய் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் 2009 ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில் மொத்தமாக 4 ஆயிரத்து 706 ஆண்களும் ஆயிரத்து 472 பெண்களும் எயிட்ஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது