இயக்குநர் அட்லீக்கு கௌரவ டாக்டர் பட்டம்!

15.06.2025 06:00:00

ராஜா ராணி படத்தின் மூலம் அறிமுகமாகி, தெறி, மெர்சல், பிகில் என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்தவர் அட்லீ. குறிப்பாக விஜய்யுடன் தொடர்ந்து மூன்று ஹிட் படங்கள் கொடுத்தார். இதன்பின் பாலிவுட் பாட்ஷா ஷாரூக்கானுடன் இணைந்து ஜவான் திரைப்படத்தை உருவாக்கினார். இப்படம் உலகளவில் ரூ. 1100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. மேலும் தற்போது சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் படத்தில் அல்லு அர்ஜுனை வைத்து இயக்கி வருகிறார்.

இந்த நிலையில், இயக்குநர் அட்லீக்கு கௌரவ டாக்டர் பட்டம் கிடைத்துள்ளது. இன்று சென்னையில் உள்ள சத்யபாமா பல்கலைக்கழகத்தின் 34வது பட்டமளிப்பு விழாவில், இயக்குநர் அட்லீக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. டாக்டர் பட்டம் பெற்ற அட்லீ மேடையில் பேசும்போது, மிகவும் எமோஷனலாக உணர்வதாக கூறினார்.

மேலும் "பொதுவாக நான் செய்யும் படங்களை அங்கிருந்து எடுத்தேன், இங்கிருந்த எடுத்தேன் என கூறுவார்கள். நான் உண்மையை சொல்கிறேன். ஏனென்றால் இப்பொது பொய் சொன்னால் எனக்கு உடனடியாக இருமல் வந்துவிடுகிறது. நான் பார்த்த விஷயங்களைதான்படமாக எடுத்தேன்.

உதாரணத்திற்கு பிகில் படத்தில் வரும் ராயப்பன் கதாபாத்திரம் J.P.R-ஐ பார்த்து உருவாகியதுதான். அவர் படிப்புக்கு நிறைய உதவிகள் செத்துள்ளார் என கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆனால், அதையெல்லாம் தாண்டி விளையாட்டுக்காக அவர் நிறைய விஷயங்களை செய்துள்ளார். சத்யபாமா கல்லூரியில் நான் முதலாம் ஆண்டு படித்தபோது, குறுப்படம் எடுக்க வேண்டுமென கேட்டேன். அப்போது J.P.R-ஐ சந்திக்க சொன்னார்கள்.

அவரிடம் போய் சொன்னதும், அவர் கேமரா எடுத்துக்கோ, சீக்கிரம் இயக்குனர் ஆயிடுனு என்னிடம் சொன்னார். அவர் சொன்ன வார்த்தை நிஜமாகிவிட்டது. என் அப்பா - அம்மா என்ன இயக்குனர் ஆகும் வரை பார்த்துக்கொண்டார்கள் என்றால், அதிலிருந்து இன்று நான் என்னவாக இருக்கிறேன் என்பதற்கு என் மனைவிதான் காரணம். நான் ஒரு நல்ல மனுஷனா மாறியதற்கு முக்கிய காரணம் என் மகன்.

இதுதவிர என் அண்ணன் தம்பி பெயரை சொன்னால் தெரிச்சுடுவீங்க. என்னோட அண்ணன் தளபதி விஜய்" என அட்லீ கூறியதும் அந்த அரங்கமே அதிர்ந்தது.