சுவிஸ் கத்திக்குத்துத் தாக்குதலில் 6 பேர் காயம்!!
சுவிற்சர்லாந்து - யேர்மனியில் எல்லையில் அமைந்துள்ள சோஃபிங்கனில் (Zofingen) ஆறு பேர் மீது கத்திக்குத்துத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் இருவர் படுகாயமடைந்தனர். மேலும் நான்கு பேர் சிறு காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனைக்குச் கொண்டு செல்லப்பட்டனர்.
உள்ளூர் தொடருந்து நிலையத்தில் ஒருவர் மக்களை கூர்மையான ஆயுதத்தால் தாக்குவதாக தொலைபேசி அழைப்பு வந்தது எனக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
கத்தியால் குத்திவிட்டு தாக்குதல் நடத்தியவர் அருகில் உள்ள கட்டிடத்திற்குள் தப்பி ஓடியுள்ளார்.
பின்னர் இரண்டு மணிநேரம் கட்டிடத்திற்குள் மறைந்திருந்து தாக்குதலாளியை சிறப்புக் காவல்துறையினர் உள்ளூர் நேரப்படி நேற்றுப் புதன்கிழமை 18.48 மணிக்குக் கைது செய்தனர்.
தாக்குதலாளி 40 வயதுடைய வெளிநாட்டைச் சேர்ந்த ஆண் எனத் தெரியவந்தது. அவரது தாக்குதலுக்கான நோக்கம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
காயமடைந்த 6 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்தவர்களில் சோபிங்கன் கன்டோனல் பள்ளியைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் மற்றும் ஒரு கர்ப்பிணிப் பெண் முகத்தில் வெட்டுக் காயங்களுக்கு உள்ளானார். இவர்கள் எவருக்கும் உயிர் ஆபத்து இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
தாக்குதலாளி தன்னைத்தானே குத்திக் கொண்ட காயங்களுடன் மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்.