உக்ரைனில் தொலைதூர நகரத்தில் ரஷ்ய படைகள் தாக்குதல்

15.07.2022 11:22:30

உக்ரைனின் மேற்கில் உள்ள மாகாண தலைநகரான வின்னிட்சியாவின் மையத்தில் ரஷ்ய படையினர் நடத்திய தாக்குதலில், குறைந்தது 23 பொதுமக்கள் (குழந்தைகள் உட்பட) உயிரிழந்ததோடு, 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் மற்றும் டசன் கணக்கானவர்கள் கணக்கில் வரவில்லை என்று உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் குவிந்துள்ள ரஷ்யப் படைகளுக்கு எதிராக உக்ரைனின் இராணுவம் கடுமையாக தாக்குதல்கள் நடத்திவரும் நிலையில், முன்னணிப் பகுதிகளிலிருந்து வெகு தொலைவில் உள்ள நகரத்தின் மீது நேற்று (வியாழக்கிழமை) ரஷ்யா தாக்குதல் நடத்தியது.

மூன்று ரஷ்ய ஏவுகணைகள் அலுவலகத் தொகுதியைத் தாக்கி குடியிருப்பு கட்டடங்களை சேதப்படுத்தியது.

உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி, இதை பயங்கரவாதத்தின் வெளிப்படையான செயல் என்று கூறினார்.

ஏவுகணைகள் ஒன்பது மாடி அலுவலகத் தொகுதியின் கார் தரிப்பிடமன் மீது சுமார் 10:50 மணிக்கு தாக்கியதாக உக்ரைனின் மாநில அவசர சேவை தெரிவித்துள்ளது. சுமார் 370,000 மக்கள்தொகை கொண்ட வின்னிட்சியாவின் மையத்தில் குடியிருப்பு கட்டடங்களும் தாக்கப்பட்டன.

பொதுமக்களை குறிவைப்பதை மறுக்கும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், தாக்குதல் குறித்து இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.