முகக்கவசம் அணிவதற்கான சட்டபூர்வமான கடமையை முடிவுக்கு கொண்டுவர தீர்மானம்: பிரதமர் பொரிஸ் !

07.07.2021 12:04:54

 

முகக்கவசம் அணிவதற்கான சட்டபூர்வமான கடமையை, அரசாங்கம் முடிவுக்குக் கொண்டுவரும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

முகக்கவசம் தொடர்பான அனைத்து சட்டங்களும் அரசாங்கத்தின் தளர்வு வரைபடத்தின் நான்காவது கட்டத்தில் இரத்து செய்யப்படும் என்றும், மீதமுள்ள அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட வேண்டும் என்றும், இந்த கட்டத்தில் இருந்து முகக்கவசம் அணிவது தனிப்பட்ட தேர்வாக மாறும் என்றும் பிரதமர் உறுதிப்படுத்தியுள்ளார்.

கடைகளில் அல்லது ஒரு மதுபானசாலை அல்லது உணவகத்திற்குள் நுழையும்போது தனிநபர்கள் முகக்கவசம் அணிவது இனி கட்டாயமாக இருக்காது என்பதே இதன் பொருள்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘மக்கள் தங்கள் தனிப்பட்ட பொறுப்பைச் செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஆனால் தங்களையும் மற்றவர்களையும் பாதுகாப்பதில் முகக்கவசங்களின் மதிப்பை நினைவில் கொள்ளுங்கள்’ என கூறினார்.

இங்கிலாந்தின் கொவிட் முடக்கநிலை தளர்வு வரைபடத்தின் இறுதி கட்டத்தில், தொலைதூர விதிகள் அகற்றப்படும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.

ஜூலை 19ஆம் திகதி திட்டமிட்டபடி இறுதி நடவடிக்கை முன்னேறும் என்று தான் எதிர்பார்க்கிறேன் என்று பிரதமர் கூறினார். சமீபத்திய தரவை மதிப்பாய்வு செய்த பின்னர் ஜூலை 12ஆம் திகதி இது உறுதிப்படுத்தப்படும்.

பாடசாலை, பயணம் மற்றும் சுய தனிமை பற்றிய கூடுதல் புதுப்பிப்புகள் வரும் நாட்களில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.