ஆப்கனில் பள்ளிகள் திறப்பு; மாணவிகளுக்கு அனுமதி மறுப்பு

18.09.2021 15:03:57

ஆப்கானிஸ்தான் முழுவதும் இன்று முதல் அனைத்து பள்ளிகளையும் திறக்க தலிபான்கள் உத்தரவிட்டு உள்ளனர். ஆனால், பள்ளிகளுக்கு மாணவர்கள் மட்டுமே வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளதால், மாணவிகளின் நிலை குறித்து கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


ஆப்கானிஸ்தானை தலிபான் பயங்கரவாதிகள் கடந்த ஆக., 15ம் தேதி கைப்பற்றினர். '1996 - 2001ம் ஆண்டு வரை இருந்த அரசைப் போல் தலிபான் அரசு இருக்காது, பெண்களுக்குக் கல்வி உரிமை, வேலைக்குச் செல்லும் உரிமை வழங்கப்படும்' என, தலிபான்கள் உறுதியளித்த நிலையில், ஆட்சிக்கு வந்ததும் அதிலிருந்து முழுவதுமாக மாறுபட்டு உள்ளனர். அனைத்திலும் பெண்களுக்கான உரிமையை மறுத்து வருகின்றனர்.



இந்நிலையில், ஆப்கனின் காமா செய்திகளில், 'ஆப்கனின் எமிரேட் அரசில் அனைத்து தனியார், அரசு சார்பில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், மதரீதியான பள்ளிகளை இன்று (செப்., 18) முதல் திறக்கலாம். ஆனால், மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டுமே பள்ளிக்கு வர வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மாணவிகளை புறக்கணித்து தலிபான்கள் விடுத்துள்ள இந்த அறிவிப்பால், ஆசிரியைகள், மாணவிகள் நிலை, எதிர்காலம் குறித்து சர்வதேச கல்வியாளர்களும், குழந்தைகள் நல ஆர்வலர்களும், வல்லுநர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.