அயர்லாந்தில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் நீடிப்பு
அயர்லாந்தில் தற்போதைய நிலை-5 அல்லது நாட்டில் மிக உயர்ந்த கொவிட்-19 கட்டுப்பாடுகள், எதிர்வரும் ஏப்ரல் 5ஆம் திகதி வரை நீடித்துள்ளதாக பிரதமர் மைக்கேல் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.
நேற்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘குழந்தை பராமரிப்பு சேவைகள், ஆரம்ப மற்றும் இடைநிலைப் பாடசாலைகள் மற்றும் முன்பாடசாலை வகுப்புகள் மார்ச் 1ஆம் திகதி முதல் ஒரு கட்டமாக மீண்டும் திறக்கப்படும்.
ஏப்ரல் 5ஆம் திகதிக்குள் இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா இல்லையா என்பது தொற்றுநோய் நிலைமை எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்தது’ என கூறினார்.
2020ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் திகதி நள்ளிரவு முதல் அயர்லாந்தில் தற்போதைய நிலை-5 கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டிருப்பது இது மூன்றாவது முறையாகும்.
அவை முதலில் ஜனவரி 12ஆம் திகதி முதல் ஜனவரி இறுதி வரை நீடிக்கப்பட்டன. பின்னர் மார்ச் 5ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டன.
நிலை-5 கட்டுப்பாடுகளின் கீழ், சில அத்தியாவசிய காரணங்களுக்காகவும், அனைத்து அத்தியாவசிய சில்லறை விற்பனை நிலையங்களும் மற்றும் பெரும்பாலான உட்புற பொது வசதிகளும் மூடப்படாவிட்டால், மக்கள் தங்கள் வீட்டிலிருந்து ஐந்து கி.மீ.க்கு மேல் பயணிக்கக்கூடாது.