
25 சதவீத பெண் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும்!
ஒவ்வொரு உள்ளுராட்சிமன்றமும் இளம் பெண்கள் உள்ளடங்கலாக 25 சதவீத பெண் பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருப்பதனை தேர்தல்கள் ஆணைக்குழு இறுக்கமாக நடைமுறைப்படுத்தவேண்டும். அதிலிருந்து தவறும் அரசியல் கட்சிகள் பொறுப்புக்கூறச்செய்யப்படவேண்டும் என 34 பெண்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கூட்டாக வலியுறுத்தியுள்ளன. |
இதுகுறித்து மன்னார் பெண்கள் அபிவிருத்திப்பேரவை, சமூக அபிவிருத்தி நிலையம், கிழக்கு சமூக அபிவிருத்தி நிதியம், பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு, முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நிதியம் என்பன உள்ளடங்கலாக 34 பெண்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஆணையாளர்களுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: உள்ளுராட்சிமன்றத்தேர்தல்கள் முடிவடைந்திருப்பதுடன், உள்ளுராட்சிமன்றங்களில் பெண்களின் 25 சதவீத கட்டாய பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படவேண்டியதன் அவசியத்தை இது மீளநினைவூட்டியிருக்கிறது. இம்முறை தேர்தலில் வாக்களித்தோரின் எண்ணிக்கை குறைவாக இருப்பினும், பிரசாரம், வாக்களிப்பு, தேர்தலில் போட்டியிடல், போனஸ் ஆசனத்தில் பதிவுசெய்யப்படல் என தேர்தல் செயன்முறையின் சகல கூறுகளிலும் பெண்கள் உத்வேகத்துடன் பங்கேற்றமையைக் காணமுடிந்தது. இதற்கு முன்னர் உள்ளுராட்சிமன்றங்களில் அங்கம்வகித்த அனுபவத்தைக்கொண்ட பெண்கள் பலர் இம்முறை கட்சிகளின் ஊடாகவோ, சுயேட்சையாகவோ போட்டியிட்டனர். அதேவேளை இத்தேர்தலில் அநேகமான பெண்கள் அதிகளவு வாக்குகளைப் பெற்றிருப்பதையும், மீண்டும் உள்ளுராட்சிமன்ற அரசியலுக்குள் பிரவேசிப்பதற்கான வாய்ப்பினைப் பெற்றிருப்பதையும் அவதானிக்கமுடிகிறது. இருப்பினும் பல சிறிய கட்சிகள் ஒன்று அல்லது இரண்டு ஆசனங்களையே கைப்பற்றியிருப்பதானது, 'ஒவ்வொரு மூன்று ஆசனங்களுக்கு ஒரு பெண்' என்ற பிரதிநிதித்துவ வீதத்தை உறுதிசெய்வதில் சிக்கலை தோற்றுவித்திருக்கிறது. கடந்தகால தேர்தல் நடைமுறைகளை அவதானிக்கையில், பெரும்பாலான கட்சிகள் பெண்களை வேட்பாளர்களாக முன்மொழிவதில் தயக்கம் காண்பித்திருப்பதுடன், சில உள்ளுராட்சிமன்றங்கள் 25 சதவீத பெண் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்வதற்கு முழுமையாகத் தவறியிருந்தன. இருப்பினும் உள்ளுராட்சிமன்றத்தேர்தல்கள் சட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் பிரகாரம், 25 சதவீத பெண் பிரதிநிதித்துவம் உள்வாங்கப்படுவதை உறுதிசெய்யவேண்டிய சட்டரீதியான கடப்பாடு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இருக்கிறது. இந்நிலையில் ஒவ்வொரு உள்ளுராட்சிமன்றமும் இளம் பெண்கள் உள்ளடங்கலாக 25 சதவீத பெண் பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருப்பதனை தேர்தல்கள் ஆணைக்குழு கட்டாயமாக நடைமுறைப்படுத்தவேண்டும். குறித்தவொரு கட்சி இரண்டு ஆசனங்களை வென்றிருப்பின், அவற்றில் குறைந்தபட்சம் ஒரு ஆசனமேனும் பெண் பிரதிநிதிக்கு ஒதுக்கப்படவேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தவேண்டும். இக்கட்டாய பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் அரசியல் கட்சிகளுக்கு அதற்குரிய அங்கீகாரம் பகிரங்கமாக வழங்கப்படும் அதேவேளை, அதனை உறுதிப்படுத்தாத கட்சிகள் பொறுப்புக்கூறச்செய்யப்படவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. |